பதிவு செய்த நாள்
01
டிச
2025
10:12
திருக்கோஷ்டியூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் அஷ்டாங்க தங்க விமானத்திற்கு 2026 பிப்., 6 கும்பாபிேஷகம் நடக்கவுள்ளதையடுத்து யாகசாலை அமைப்பதற்கு முகூர்த்தக்கால் நடும் உற்ஸவம் நேற்று நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சிறப்பு மிக்க மூலவர் அஷ்டாங்க விமானம் உள்ளது. இந்த விமானத்திற்கு தங்க தகடு வேயும் திருப்பணி நடந்து வருகிறது.
தேவஸ்தானம், ஹிந்து அறநிலையத்துறை, சவுமிய நாராயண பெருமாள் சாரிடபிள் டிரஸ்ட் ஆகியவை திருப்பணியை செய்து வருகின்றன.
விமானத்தின் மூன்று நிலைகளில் தற்போது முதல் நிலையில் தங்கத்தகடு வேயும் பணி நடக்கிறது. அஷ்டாங்க விமானத்தில் 3600 சதுர அடிக்கு தாமிரத்தகடு அடித்து கவசம் செய்யப்பட்டுள்ளது.
நான்கு மூலைகளிலும் வேதங்களைப் போல கருடன்கள், இரு இதிகாசங்கள் போல கருடனுக்கு இரு புறமும் சிங்கங்கள், விமானத்தின் எட்டு திசைகளிலும் எட்டு கந்தர்வ கன்னிகள், அனைத்து கந்தர்வ பிம்பங்கள், விமானத்தின் உச்சியில் ஆயிரம் ஆண்டு பழமையான தங்க ஸ்துாபி, கிழக்கே லட்சுமி வராக பெருமாள், தெற்கே லட்சுமி நரசிம்மர், மேற்கே லட்சுமி நாராயணன், வடக்கே வைகுண்டபதி உட்பட 18 விக்ரகங்களுக்கு தாமிர தகடு பொருத்தப்படுகிறது.
இத்திருப்பணிகள் நிறைவடைந்து பிப்., 6ல் தங்க விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதற்காக 8 கால யாகசாலை பூஜைகள் பிப்., 1 முதல் 5 நாட்கள் நடக்கவுள்ளன.
யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நேற்று காலை ஊன்றப்பட்டது. முன்னதாக காலை 8:00 மணிக்கு சிம்ம மண்டபத்தில் பட்டாச்சார்யர்களால் சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து முகூர்த்தக்கால் மூலவரிடம் சாத்தி எடுக்கப்பட்டு கிராம பிரதட்சணம் நடந்தது.
சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவண கணேசன், நிர்வாகிகள், பட்டாச்சார்யார்கள் பங்கேற்றனர்.