மயிலாடுதுறை: சீர்காழி அருகே புதன் ஸ்தலமான திருவெண்காடு கோவிலில், பால்குடம் எடுத்து, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வழி பாடு நடத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில், தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. நவகிரஹங்களில் இது புதன் ஸ்தலமாகும். இங்கு சிவபெருமானின் அம்சமான அகோரமூர்த்தி, தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். அகோர மூர்த்தியை வழிபட்டால் சத்ரு உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம். அகோர மூர்த்திக்கு ஞாயிறுதோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில், கார்த்திகை மூன்றாவது ஞாயிறு அன்று நடைபெறும் அபிஷேகம் சிறப்பானதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடந்த அகோரமூர்த்தி திருநாளில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பால்குடம் எடுத்து வழிபட்டார். பக்தர்களுடன் கோவில் சந்திர தீர்த்தத்தில் இருந்து பால்குடம் எடுத்து, கோவிலை வலம் வந்து அகோர மூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, சுவாமி, அம்பாள், நடராஜர், புதன் பகவான் சன்னிதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.