ஹாசன் மாவட்டம், முகிகெரேவில் ஸ்ரீ கபாலி பசவேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக நந்தி பகவான் உள்ளார். இந்த கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவனுக்கு பல கோவில்கள் இருக்கும் போது, அவரின் வாகனமான நந்திக்காக பிரத்யேக கோவில்கள் இருப்பது அரிதே. அப்படிப்பட்ட அரிதான விஷயத்தை நாமும் காணலாம்.
பக்தி, பாரம்பரியம், சமூக ஒற்றுமையை ஒன்றிணைக்கும் விதமாக இக்கோவில் உள்ளது. பக்தர்களின் மனதில் சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது. இந்த கோவலில் தத்துவ ஞானி பசவண்ணரின் கூற்றுகள் பிரசாரம் செய்யப்படுகிறது. இங்கு வந்து நந்தி பகவானை வழிபடும் பக்தர்களின் வாழ்க்கை மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நகரின் புறநகர் பகுதியில் கோவில் அமைந்துள்ளதால், கோவில் அமைந்துள்ள இடம் அமைதியாக காட்சி அளிக்கிறது. இந்த கோவில் தென்னிந்திய கட்டட கலையை பிரதிபலிக்கிறது. கோவிலில் பசவன்னர் ஜெயந்தி பிரமாண்டமாக கொண்டாடப்படும். அப்போது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பர். இந்த கோவிலில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. முகிகெரே ஏரிக்கு அருகே கோவில் அமைந்து உள்ளது. தென்னை மரங்களின் நடுவே ரம்யமாக இயற்கை அழகுடன் கோவில் காட்சி அளிக்கிறது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நீராடினால் மன உறுதி, மாணவர்களுக்கு கல்விக்கான நினைவாற்றல் போன்றவை கிடைக்கும். இங்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கிலான பக்தர்கள், பல ஊர்களில் இருந்து வந்து பங்கேற்கின்றனர். கோவில் காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.
எப்படி செல்வது?: பஸ்: ஹாசன் பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.
ரயில்: பெங்களூரில் இருந்து சன்னராயப்பட்டணா ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம். – நமது நிருபர் –: