திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சேவல் கொடி ஏற்ற கோரிக்கை மனு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2025 12:12
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் அருகே உள்ள கல்லத்தி மரத்தில் சேவற் கொடி ஏற்ற வேண்டுமென நேற்று கோயில் கண்காணிப்பாளர் ரஞ்சனியிடம் பாரத ஹிந்து எழுச்சி முன்னணியினர் மனு கொடுத்தனர்.
மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் முருகப்பெருமானது கொடியான சேவல் கொடியை ஏற்றி முருக பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு ஏதுவாக வழி செய்யுமாறும், முருகனுக்கு சொந்தமான மலையில் மற்றவர்கள் ஆக்கிரமிக்காத வகையில் உறுதி செய்ய வேண்டும். கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் நிர்வாகமே அதில் அரசியல் செய்யக்கூடாது. மலையையும் கோயிலையும் பாதுகாப்பதற்கு ஒரு குழு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அறநிலையத்துறை சார்பில் செய்ய தவறும் பட்சத்தில் முருக பக்தர்கள் ஒன்றிணைந்து நாங்களே பணிகளை செய்ய துவங்குவோம் என அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். தலைவர் பாண்டியன்ஜீ கூறியதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலை பறிபோய்க் கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் 14 புனித தீர்த்த கிணறுகள் இருந்தது. ஏராளமான தீர்த்த கிணறுகளை காணவில்லை.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது முருக பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளோம். அதற்கு அறநிலையத்துறை செவி சாய்க்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பையும் அறநிலைத்துறை மதிக்கவில்லை. முருக பக்தர்களின் உரிமைகளை அறநிலையத்துறை பறித்துக் கொண்டிருக்கிறது. மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என அறநிலைய துறையே முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் தீபதூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அறநிலையத்துறையே எதிர்த்து போராடுகிறது. அறநிலையத்துறைக்கும் மாற்று மதத்தினருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் செய்ய வேண்டியது தான். ஆனால் அரசியல் என்ற பெயரில் முருக பக்தர்களின் மனதை புண்படுத்தக் கூடிய அளவிற்கு தொடர்ந்து இந்த அரசும், அரசியல்வாதிகளும் வஞ்சித்து கொண்டிருக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தில் சேவல் கொடி ஏற்ற வேண்டும். இது குறித்து ஏற்கனவே நாங்கள் போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனாலும் சேவல் கொடி ஏற்றுவார்களா என்பதை அறநிலையத்துறையை நம்ப முடியாது. இந்த மலை முருகப்பெருமானின் சொத்து. எங்களது முன்னோர்களது சொத்து. இந்தச் சொத்தை அறநிலையத்துறை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் பறிகொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். மலையில் யார் யாரோ ஆக்கிரமிக்கின்றனர். இதை அறநிலையத்துறை கண்டுகொள்ளவில்லை. வன்மையாக கண்டிக்கிறோம். திருப்பரங்குன்றம் மலையை அறநிலையத்துறை பாதுகாக்கவில்லை என்றால் வெளியேற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என்றார். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்தார். தீப தூணில் தீபம் ஏற்ற தொடரும் கோரிக்கை மனு: மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பல்வேறு ஹிந்து அமைப்பினர், தமிழ்நாடு பிராமணர் சங்கம், பொது அமைப்பினர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு மனு அளித்தனர்.
கையெழுத்து இயக்கம்: மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி ஹார்விபட்டி ஆன்மிக இறையன்பர்கள் குழு, பொதுமக்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி மனுவை கலெக்டர் இடம் வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படைவீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி, கார்த்திகை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பங்குனி மாதம் கிரிவலம் ரோட்டில் பெரிய வைரத் தேர் வலம் வரும். கந்த சஷ்டி திருவிழாவில் சட்டத்தேர் கிரிவலம் வரும். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் கரத்தில் உள்ள தங்கவேல் புரட்டாசி மாதம் மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சுனை தீர்த்தத்தில் அபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாதம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்பது பன்னெடுங்காலமாக பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வழங்கிய தீர்ப்பின்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்த்து காத்து இருந்தோம். அவரவர் முறைப்படி இறைவனை வழிபட உரிமை உண்டு என்ற அடிப்படையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விரைவில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.