திருப்பரங்குன்றத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் மாற்று இடத்தில் தீபம் ஏற்றினால் என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி
பதிவு செய்த நாள்
13
டிச 2025 10:12
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் அனைவரும் பார்க்கும் வகையில், கூடுதலாக மாற்று இடத்தில் தீபம் ஏற்றினால் என்ன? என, மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிகுமார் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார். இதே போல, கலெக்டர், போலீஸ் கமிஷனர், அறநி லையத்துறை இணை கமிஷனர், சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம், தமிழக வக்பு வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து, 20 ரிட் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின. தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தீபத்துாணில் ராம ரவிகுமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, டிச., 4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, கலெக்டர், போலீஸ் கமிஷனர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அவமதிப்பு வழக்கு டிச., 9ல் விசாரணைக்கு வந்தது. அனுமதிக்கக்கூடாது: நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன், நீதிமன்ற உத்தரவு மீண்டும், மீண்டும் மீறப்படுகிறது. மாவட்ட அளவிலான அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் தொடர்பாக சுற்றறிக்கை அல்லது அறிவுறுத்தல் வெளியிடும் திட்டம் உள்ளதா என்பதை அறிய தமிழக தலைமை செயலர், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., காணொலியில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தலைமை செயலர், ஏ.டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா.கதிரவன், ரவீந்திரன், அறநிலையத்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கோவில் நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி ஆஜராகினர். டிச., 1ல் ரிட் மனுவில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது விவாதம் நடந்தது. வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதம்: தீபம் ஏற்றும் விவகாரத்தில், 1994ல் பிரச்னை ஏற்பட்டது. அப்போது தாக்கலான ஒரு வழக்கு அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டப தீபத்துாணில் கோவில் நிர்வாகம் தீபம் ஏற்றலாம். வேறு யாரையும் ஏற்ற அனுமதிக்கக்கூடாது. எதிர்காலத்தில் தேவையெனில் வேறு இடத்தில் தீபம் ஏற்றும் வகையில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் முடிவெடுக்கலாம். மாற்று இடம் தர்காவிலிருந்து 15 மீட்டர் அப்பால் இருக்க வேண்டும் என, உத்தரவிட்டார். மலை உச்சியில் தீபம் ஏற்ற, 2014ல் மற்றொரு வழக்கு தாக்கலானது. நீதிபதி வேணுகோபால், வழக்கமாக ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றுவதை வேறு இடத்திற்கு மாற்ற தேவையில்லை என, தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து அம்மனுதாரர் மேல்முறையீடு செய்தார். 2017ல் நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்தது. மாற்றம் செய்ய முடியாது: பாரம்பரியமாக தீபம் ஏற்றும் அதே இடத்தில் ஏற்ற வேண்டும் என, கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. மாற்று இடத்தில் ஏற்றுவது குறித்து அத்தீர்ப்புகளில் குறிப்பிடப்படவில்லை. வழிபாட்டு தலங்கள் சட்டப்படி 1947 ஆக., 15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வழிபாட்டு தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையில் தொடர வேண்டும். மாற்றம் செய்ய முடியாது. இவ்வாறு வாதிட்டார். நீதிபதிகள், அனைவரும் பார்க்கும் வகையில் கூடுதலாக மாற்று இடத்தில் தீபம் ஏற்றினால் என்ன? என, கேள்வி எழுப்பினர். இதற்கு, பி.எஸ்.ராமன், இதை சிவில் வழக்கில் தான் தீர்மானிக்க முடியும். ரிட் வழக்கு மூலம் தீர்வு காண முடியாது. வேறு இடத்தில் மாற்றி தீபம் ஏற்றினால் சமூக அமைதியை பாதிக்கும். மாற்றக்கூடாது என கடந்த காலங்களில் நீதிமன்ற உத்தரவுகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ராம ரவிகுமார் உள்நோக்குடன் மனு அளித்துள்ளார் என்றார். வழக்கறிஞர் மாசிலாமணி, மலை இரு பகுதிகளை கொண்டது. ஒரு பகுதியில் தர்கா உயரமான இடத்திலும், தீபத்துாண் என குறிப்பிடும் பகுதி சற்று தாழ்வான இடத்திலும் அமைந்துள்ளன. அதில் தீபம் ஏற்றினால் மலையை சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு தெரியாது. அது தீபத்துாண் என்பதற்கு ஆதாரம் இல்லை. அது நில அளவை எல்லையை குறிக்கும் சர்வே கல். கிரானைட்டால் ஆனது. அதில் தீபம் ஏற்றுவது பாதுகாப்பற்றது என்றார். நீதிபதிகள் விசாரணையை டிச., 15க்கு ஒத்திவைத்தனர்.
|