மார்கழி பூஜை: திருநெல்வேலி கோவில்களில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2025 11:12
திருநெல்வேலி, தேவலோகத்தின் அதிகாலைப் பொழுதாக கருதப்படும் மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜை விமர்சையாக நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு சொக்கநாத சுவாமி திருக்கோவில், நெல்லையப்பர் திருக்கோவில், சாலை குமாரசுவாமி திருக்கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மார்கழி மாதப் பிறப்பை ஒட்டி திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பஜனை வீதி பாராயணங்களும் நடைபெற்றன. திருநெல்வேலி டவுன் செண்பகம் பிள்ளை தெருவில் உள்ள செண்பக விநாயகர் திருக்கோவிலின் நூற்றாண்டு பழமையான பஜனை மடத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் ஒன்று திரண்டு பஜனை வீதி பாராயணத்தில் ஈடுபட்டனர். இதில் திருப்பள்ளிஎழுச்சி, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் மற்றும் திருமுறை விண்ணப்பங்கள் பாடப்பட்டு, கோலாகலமாக நிகழ்ச்சி நடைபெற்றது.