காஞ்சி காமகோடி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிகளின் 32வது வார்ஷிக ஆராதனை மகோத்சவத்தையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு சங்கரமடத்தில் உள்ள மஹா சுவாமிகள் பிருந்தாவனம் முன், ருத்ர பாராயணம், பூஜை, ஹோமம், பஞ்சரத்த கீர்த்தனைகள், கோஷ்டிகான நாத சமர்ப்பணம் உள்ளிட்டவை நடந்தன. மதியம் 2:30 மணிக்கு பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், மஹா சுவாமிகள் பிருந்தாவனம் மற்றும் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதை தொடர்ந்து வேதபண்டிதர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாலை 5:30 மணிக்கு ராஜேஷ் குழுவினரின் மாண்டலின் இசை நிகழ்ச்சி நடந்தது. வார்ஷிக ஆராதனை மகோத்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.