முருக கடவுள் பற்றி கிண்டலடித்த வழக்கறிஞர் ஜோதி மன்னிப்பு கேட்க வேண்டும்; ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தல்
பதிவு செய்த நாள்
17
டிச 2025 12:12
சென்னை: உயர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, முருக கடவுள் பற்றி கிண்டலடித்த வழக்கறிஞர் ஜோதி மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. அதன் விபரம்: விஸ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணை பொதுச்செயலர் ஸ்தாணுமாலயன்: உயர் நீதிமன்றத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான ஜோதி, முருகனுக்கு இரண்டு மனைவியர் இருக்கலாம். ஆனால், ஒரு இடத்தில் மட்டும்தான் தீபம் ஏற்ற முடியும் என்று கிண்டலடித்திருக்கிறார். ஹிந்து பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் ஜோதிக்கு, அறநிலையத் துறை கட்டணம் கொடுக்கும். ஹிந்துக்களின் கையை கொண்டே ஹிந்துக்களின் கண்களை குத்துவது போல, ஹிந்து பக்தர்களின் பணத்தை வாங்கிக் கொண்டு, ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தியிருக்கிறார் ஜோதி. ஹிந்து மதம், ஹிந்து கடவுள்களை கிண்டல், கேலி செய்வதை, தி.மு.க., வழக்கமாக கொண்டுள்ளது. அதையே ஜோதியும் செய்திருக்கிறார். இதற்காக, அவர் ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். திருப்பரங்குன்றம் வழக்கிலிருந்து ஜோதியை ஹிந்து சமய அறநிலையத் துறை விடுவிக்க வேண்டும். ஹிந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன்: திருப்பரங்குன்றம் வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான தி.மு.க.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோதி, முருகனுக்கு இரண்டு மனைவியர் இருக்கலாம். அதற்காக இரண்டு இடங்களில் தீபம் ஏற்ற முடியுமா என, வக்கிரமான வாதத்தை முன்வைத்து உள்ளார். ஹிந்து விரோத தி.மு.க.,வின் வக்கிர சிந்தனை, ஜோதியின் வார்த்தைகளில் வெளிவந்துள்ளது. இதை விட முருகபெருமானை யாரும் அவமதிக்க முடியாது. வேறு மத கடவுள் பற்றி, இப்படி கிண்டலடிக்கும் துணிவு ஜோதிக்கு உள்ளதா? ஹிந்து கடவுள்களை கேவலப்படுத்தும் இதுபோன்ற கருத்துகளை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும். பா.ஜ., மாநில இளைஞரணி செயலர் சூர்யா: திருப்பரங்குன்றம் வழக்கில், வாதம் என்ற பெயரில், தமிழ் கடவுள் முருகபெருமானின் திருமண வாழ்வை உதாரணம் காட்டி, ஹிந்து சமய அறநிலையத் துறை வழக்கறிஞர் ஜோதி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் வழக்கத்தை, ஒருபோதும் தி.மு.க., கைவிடாது என்பதையே இது காட்டுகிறது. அறநிலையத்துறை என்பது கோவில்களைப் பேணி பாதுகாக்கவா அல்லது இறை நம்பிக்கையைச் சிதைக்கவா என்பதற்கு, அமைச்சர் சேகர்பாபு என்ன பதில் சொல்லப் போகிறார்? இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
|