நடப்பு மண்டல காலத்தில் சபரிமலை வருமானம் 210 கோடி ரூபாய்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2025 03:12
சபரிமலை: சபரிமலை நடப்பு மண்டல காலத்தில் 210 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே ஜெயக்குமார் கூறினார்.
சன்னிதானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சன்னிதானத்தில் அறை எடுத்து தங்கும் பக்தர்களுக்கு முன்பணம் திரும்ப வழங்க தனி கவுன்டர் திறக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது செலுத்தும் முன் பணத்தை அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்படும். ஒரு பக்தருக்கு 20 டின் அரவணை என்பது தொடரும். எல்லோருக்கும் அரவணை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. டிச.,27-ல் மண்டல பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டதும் மூன்று தினங்களில் முடிந்த அளவு அரவணை உற்பத்தி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்படும். சீசன் தொடக்கத்தில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அரவணை வழங்கப்பட்டது. ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவு அரவணை விற்பனை பல மடங்கு அதிகரித்ததால் கையிருப்பு குறைந்தது. ஒரு நாள் மூன்றரை லட்சம் டின் அரவணை விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான்கரை லட்சம் டின் அரவணை விற்பனை ஆகிறது. தற்போது தினமும் 2.5 லட்சம் அரவணை உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே இருப்பில் உள்ள ஒரு லட்சம் டின் அரவணை எடுக்கப்படுகிறது. மகர விளக்கு காலத்தில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் பற்றி ஆலோசிப்பதற்காக 26ம் தேதி அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். மண்டல காலத்தில் இதுவரை மொத்த வருவாய் 210 கோடி. அதில் அரவணை விற்பனையில் 106 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.