அரியலுார் மாவட்டம், இலையூரில் பழமை வாய்ந்த காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் மூலவரான லிங்கம் மரகதமாகும். நேற்று முன்தினம் மாலை, பிரதோஷத்தையொட்டி லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், அதே கிராமத்தை சேர்ந்த குருக்கள் கலியபெருமாள், 81, என்பவர் கோவிலை பூட்டி, சாவியை தலைக்கு அடியில் வைத்து அங்கேயே உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது சாவியை காணவில்லை. கோவிலில் கதவு திறக்கப்பட்டு, மரகதலிங்கம் திருடப்பட்டிருப்பது தெரிந்தது. பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., விஷ்வேஷ் பா.சாஸ்திரி, ஜெயங் கொண்டம் டி.எஸ்.பி., ரவிச் சக்கரவர்த்தி, இந்து சமய அறநிலைத்துறை ஜெயங்கொண்டம் செயல் அலுவலர் சிவனேயசெல்வன் உள்ளிட்டோர் கோவிலில் ஆய்வு செய்தனர். போலீசார், சிலையை திருடிய மர்ம நபர்களை தேடுகின்றனர்.