விடியலுக்கான 3 அடையாளங்களை அருளிய ஆண்டாள்; ஓய்வு பெற்ற நீதிபதி உபன்யாசம்
பதிவு செய்த நாள்
24
டிச 2025 11:12
புதுச்சேரி: ஆண்டாளின் 8ம் பாசுரத்தில் விடியலுக்கான மூன்று அடையாளங்கள், செய்ய வேண்டிய மூன்று கடமைகள், செய்தால் எம்பெருமான் நம்மை எதிர்கொள்ளும் மூன்று நிலைப்பாடுகளை ஆண்டாள் அருளியுள்ளதும் பாசுரத்தின் சிறப்பாகும். முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருப்பாவையின் 8ம் நாளான நேற்று முன்னாள் நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம். ஆண்டாள் அருளிய 8ம் பாசுரத்தில் விடியலுக்கான மூன்று அடையாளங்கள், செய்ய வேண்டிய மூன்று கடமைகள், செய்தால் எம்பெருமான் நம்மை எதிர்கொள்ளும் மூன்று நிலைப்பாடுகள் என்று ஆழ்வார்களுக்குத் திருப்பள்ளி எழுச்சி சொல்லும் பாசுரங்களில் மூன்றாவதான இந்தப் பாசுரத்தில் மூன்று மூன்றாக ஆண்டாள் அருளியுள்ளது சிறப்பாகும். ஆண்டாள் காட்டும் விடியலுக்கு 3 அடையாளங்கள் கீழ்வானம் வெளுத்தல், எருமை சிறுவீடு மேய்தல், கூவி அழைக்க வந்து நிற்கும் தோழியர் கூட்டம். செய்யவேண்டிய மூன்று கடமைகள்; எழுதல், பாடுதல், சேவித்தல். கிழக்கு வெளுத்து விட்டதே என்று விடியலின் அறிகுறியை ஒரு உத்தமமான தோழியின் வீட்டு வாசலில் நின்று, உள்ளே கிருஷ்ணானுபத்தில் திளைத்து உறங்குவது போல் சோம்பலுடன் படுத்திருப்பவளை ஆண்டாள் கோஷ்டியினர், ‘கீழ்வானம் வெள்ளென்று வெளுத்துவிட்டதே தோழியே.. எழுந்திரு’ என்று பனிப்புல் மேயச் எருமைகள் செல்வதை விடியலின் மறுக்க முடியாத அடையாளமாகச் சொல்லி எழுப்புவதாகக் கொள்வது பொதுவான அர்த்தம். ஆழ்வார்களின் திருப்பள்ளி எழுச்சிப் பாசுரங்கள் என்று அனுபவிக்கப்படும் 6 முதல் 15 வரை உள்ள 10 பாசுரங்களில், இந்த மூன்றாம் திருப்பள்ளி எழுச்சிப் பாசுரத்தில் நம்மாழ்வாரை தன் பாவை நோன்பிற்கு ஆண்டாள் அழைப்பதாக உள்ளுறைப் பொருள் அருள்வர் ஆன்றோர். கண்ணனின் லீலைகளில், கண்ணனைக் கொல்ல கம்சனால் ஏவப்பட்ட, கொக்கு உருவில் வந்த பகாசூரனையும், குதிரை வடிவில் வந்த கேசி என்ற அரக்கனையும், அவர்களின் வாயைப் பிளந்து கண்ணன் மாய்த்ததையும், சாணுாரன், முஷ்டிகன் ஆகிய மாமல்லர்களை மாய்த்தை மாயகண்ணனின் புகழும் இந்தப் பாசுரத்தில் சொல்லப்படுள்ளது’ என்றார்.
|