பதிவு செய்த நாள்
04
ஜன
2013
11:01
தஞ்சாவூர்: திருவையாறில் தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழாவை, வரும், 27ம் தேதி தமிழக கவர்னர் ரோசைய்யா துவக்கி வைக்கிறார். தஞ்சை மாவட்டம், திருவையாறில் தியாகராஜர் ஸ்வாமிகளின் ஆராதனை விழா, ஆண்டுதோறும் நடத்தப்படும். நடப்பாண்டு தியாகராஜர் ஸ்வாமிகள், 166வது ஆராதனை விழா வரும், 27ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து தியாக பிரம்ம மகோத்ஸவ சபை தலைவர் மூப்பனார் கூறியதாவது: திருவையாறில் தியாகராஜர் ஸ்வாமி, 166வது ஆராதனை விழா வரும், 27ம் தேதி மாலை, நான்கு மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. விழாவில், தமிழக கவர்னர் ரோசைய்யா பங்கேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். மத்திய அமைச்சர் ஜி.கே., வாசன், தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் முன்னிலை வகிக்கின்றனர். பின்னர், இசை நிகழ்ச்சி துவங்கி இரவு, 12 மணி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக தியாகராஜர் முக்தி அடைந்த தினமான, 31ம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை, 7 மணிக்கு தியாகராஜர் ஸ்வாமி வசித்த வீட்டிலிருந்து உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் புறப்பட்டு, விழா பந்தல் முன் நிறைவடைகிறது. 9 மணிக்கு தியாகராஜர் சமாதியிலுள்ள தியாகராஜர் விக்ரகத்துக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. விழா பந்தலில் உள்ள ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் ஒரே குரலில் கீர்த்தனைகளை இசைத்தும், பாடியும் தியாகராஜர் ஸ்வாமிக்கு கீர்த்தனாஞ்சலி செலுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தியாக பிரம்ம மகோத்ஸவ சபை செயலாளர்கள் அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ் மற்றும் அறங்காவலர்கள் உடனிருந்தனர்.