பதிவு செய்த நாள்
04
ஜன
2013
11:01
மதுரை: மதுரையில், தேசிய புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் வருவதை தொல்லியல் துறை கண்டுகொள்ளவில்லை. மதுரையில் அரிட்டாபட்டி, ஆனைமலை, செக்கானூரணி, திண்டியூர், கீழையூர், கீழவளவு உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புராதான சின்னங்கள் உள்ளன. இங்கு 16 மற்றும் 19ம் நூற்றாண்டில் சமணர்கள் வாழ்ந்ததற்காக அழியாப்புகழ் கொண்ட சிலைகள், கல் படுகைகள், வட்டெழுத்துக்களின் அடையாளங்கள் உள்ளன. இவை, தேசிய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு, அத்துமீறி நுழைவோர், சின்னங்களை சிதைப்போர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது தொல்லியல் துறை பாதுகாப்பு சட்டப்படி சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதற்கான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அழியும் தேசிய சின்னம்: அரிட்டாபட்டி, கீழவளவில் உள்ள தேசிய சின்னங்கள் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதற்காக சிதைக்கப்பட்டுள்ளன. கிராம மக்களின் கடும் எதிர்ப்பால், பாதி சிதையுண்ட நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது. ஒத்தக்கடையில் உள்ள பிரமாண்டமான யானைமலையை சிற்பக்கலை நகரமாக மாற்ற முயற்சி நடந்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து ஒத்தக்கடை, நரசிங்கபுரம், திருமோகூர், ராஜகம்பீரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அம்முயற்சி கைவிடப்பட்டது.
மது அருந்தும் கொடுமை: புகழ்பெற்ற யானைமலை சமணர் கல் படுகைகளில் ஹாயாக... படுத்துக் கொண்டு மது அருந்தி நாசம் செய்வது தொடர்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சமணர் படுகைக்கு செல்ல முடியாமல், முகம் சுளித்தபடி பாதியிலேயே திரும்பி செல்லும் அவலம் நிகழ்கிறது. எனினும், வேறுவழியின்றி சமணர் கோயிலில் உள்ள மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இயக்கி ஆகிய தெய்வங்களை சிரமத்தின் பேரில் தரிசனம் செய்கின்றனர்.
குமுறும் சுற்றுலா பயணிகள்: மோகன், வங்கி மேலாளர், தேனி: புத்தாண்டு அன்று தரிசனம் செய்ய வந்தேன். நடக்க முடியாதபடி நெடுகிலும் அசிங்கம். தேசிய புராதன சின்னம் பாதுகாப்பின்றி இருப்பது வேதனைக்குரியது. இதனால், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மிகவும் சிரமம் அடைவர். தேசிய சின்னத்தை பாதுகாக்க வேண்டியது, நம் கடமை.
மூர்த்தி, துபாய்: இங்குள்ள சிலைகளில் பூசப்பட்டுள்ள வர்ணங்கள் காலத்தால் அழியாதவை. புதுக்கோட்டையில் சித்தன்னவாசல் கோயில் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது. அதுபோல் யானைமலை சமணர் கோயிலையும் பாதுகாக்க வேண்டும்.