வாடிப்பட்டி; நாகமலை புதுக்கோட்டை நிலையூர் கால்வாய் புல்லுாத்து ரோட்டில் ஆனந்த ஐயப்பன் கோயில் உள்ளது.நாகமலை மவுன குருசாமி சன்னாசி சுவாமிகள் சபரி பாதயாத்திரை ஐயப்ப பக்த குழு சார்பில் 53ம் ஆண்டு ஆராட்டு விழா நடந்தது. விநாயகர் பூஜை, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து குருசாமி சோமசுந்தரம், துணை குருசாமிகள் சின்னன், ஜெகநாதன், உதயகுமார் வைகை (நிலையூர் கால்வாய்) தென்பம்பா நதிக்கு சுவாமியை அழைத்து வந்தனர். சுவாமிக்கு பால், சந்தனம், ஜவ்வாது, இளநீர்,நெய் உள்ளிட்ட பல்வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகத்தை அர்ச்சகர் அருணாச்சலம் செய்தார். பின் கலசாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களின் சரண கோஷத்துடன் ஆராட்டு விழா நடந்தது. நான்குகால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவா தரிசனம், மதியம் மண்டலாபிஷேகம், சரணகோஷ ஆராதனையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு பஞ்ச சிவ கயிலாய வாத்தியம் முழங்க, வான வேடிக்கையுடன் சுவாமியின் திருத்தேர் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்த குழுவினர் செய்தனர்.