கூடலூர்; கூடலூர் கிராமங்களில் அதிகாலை மார்கழி மாத ராமர் பஜனை ஊர்வலத்தில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
கூடலூர், பந்தலூர் அரசு தேயிலை தோட்டங்கள் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய மக்கள், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ராமர் பஜனை நடத்தி வருகின்றனர். கிராமம் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து இளைஞர்கள், பக்திமயத்துடன் மார்கழி 1ம் தேதி முதல் நாள்தோறும் அதிகாலை ராமர் விளக்கு ஏற்றி (கம்பம் விளக்கு) அதனை வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூஜை பெற்று சூரிய உதயத்துக்கு முன் கோவிலுக்கு வந்தடைகின்றனர். நடப்பாண்டு, பகுதிகளில்மார்கழி 1ம் தேதி ராமர் பஜனை துவங்கி நடைபெற்று வருகிறது. பஜனை ஊர்வலத்தில் இளைஞர்கள் டோலாக் இசையுடன் ராமரை போற்றி பாடல்களை பாடி வருகின்றனர். அதிகாலையில் செல்ல முடியாத சில பகுதிகளுக்கு, சூரிய உதயத்துக்கு பின் மாலை நேரத்தில் ராமர் விளக்கு எடுத்துச் சென்று பூஜை பெற்று வருகின்றனர். மார்கழி மாதம் இறுதி வரை நடைபெறும். தொடர்ந்து, தை 1ம் தேதி பொங்கல் விழாவை முன்னிட்டு நிறைவு விழா நடைபெறும். அதில், கம்பம் விளக்கு ஏற்றி செல்ல அலங்கரிக்கப்பட்ட தேரில் (சப்பரம்) ராமரை ஊர்வலமாக வீடுகளுக்கு எடுத்துச் சென்று வருவதுடன் விழா நிறைவு பெறுகிறது. மக்கள் கூறுகையில், கிராமப் பகுதி சேர்ந்த இளைஞர்கள் மார்கழி 1 தேதி முதல், அதிகாலை ராமர் பஜனை ஊர்வலத்தில் நடத்துவது தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். கிராம இளைஞர்கள், மார்கழி மாதம் முழுவதும் சைவ உணவு சாப்பிடுவதுடன், கோவில் அல்லது பொதுவான இடத்தில் தங்கி ஊர்வலம் பங்கேற்று வருகின்றனர். தை ஒன்றாம் தேதி விழா நடைபெறும் என்றார்.