சாஸ்திரங்களில் பல ஏற்றங்கள் உண்டு: ஓய்வு பெற்ற நீதிபதி உபன்யாசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 02:01
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத உற்சவத்தில் நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய 18ம் பாசுர உபன்யாசம்:
திருப்பாவையின் 18ம் பாசுரம் மகாலட்சுமி ஸ்வரூபமான நப்பின்னைப் பிராட்டியை முன்னிறுத்தி அருளியுள்ள பாசுரம். நீளா தேவி தான் கிருஷ்ணாவதார காலத்தில் நப்பின்னை. புலன் மங்கை என்ற நீளாதேவி தான் இந்திரியங்களைக் கட்டுப்படுத்துபவள். இந்தப் பாசுரத்தில், தொடுதல், முகர்தல், சுவைத்தல், கேட்டல், பார்த்தல் ஆகிய ஐம்பொறிகளும் உணர்த்துவதை பாசுரச் சொற்களாள் ஆண்டாள் உணர்த்தியுள்ளாள். வைணவத்தின் முக்கிய சித்தாந்தமான, திருமாலும், திருமகளும் பிரிக்க முடியாதவர்கள் என்பதையும், அவர்கள் இருவரும் சேர்ந்தே உபாயமாகவும் உபேயமாகவும் இருப்பதையும் இப்பாசுரம் உணர்த்துகிறது. இதை ‘ஏக சேஷித்வம்’ என்றுரைப்பார்கள். கண்ணன் காலயவணன் என்ற அசுரனுக்கு ஓடுவது போல் போக்கு காட்டி, முசுகுந்தன் என்பவன் மூலம் காலயவணனை மாய்த்த வரலாற்றை உணர்த்தும் வகையில் கண்ணனை ‘ஓடிய தோள் வலியன்’ என்று எதிர்மறையில் உணரும்படி பாசுர வரியை அமைத்திருப்பது, ஆண்டாளுக்கே உரிய கவி நயம்.
இந்தப் பாசுரம், திருப்பாவையின் 18வது பாசுரம். 18க்கு எப்பொழுதுமே ஒரு ஏற்றம் உண்டு. ராமாயணத்தில் பால காண்டத்தில் 18வது சர்கம் ராமனின் அவதாரம். அயோத்யா காண்டத்தில் 18 வது சர்கம் கைகேயி வரத்தால் ராமன் கானகம் போவது. சுந்தர காண்டத்தில் 18வது சர்கம் அசோக வனத்தில் ஹனுமான் ஸீதா பிராட்டியை பார்த்தது. யுத்த காண்டத்தில் 18வது சர்கம் விபீஷ்ண சரணாகதி. பாரதப் போர் 18 நாட்கள். பகவத் கீதையின் அத்தியாயங்கள் 18. பகவத் கீதையின் 18வது அத்தியாயம் கீதோபதேசம். புரணங்கள் 18. சாஸ்தாவின் படிகள் 18. விவசாயம் தொடங்கும் ஆடிப் பெருக்கு 18ம் நாள். ராமானுஜர் அஷ்ட்டாச்சர மந்த்ரம் பெற 18 முறை திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சென்றார். 18ல் உள்ள எண்கள் 1ம் 8ம் கூட்டினால் 9. இந்த 9வது திதியான நவமி தான் ராமன் அவதரித்த திதி. நவமி திதியில் பிறந்தவர்கள் எதிரி பயமின்றி இருப்பர். இப்படி 18க்கு நம் சாஸ்திரங்களில் பல ஏற்றங்கள் உண்டு. அதனால் தான் ஆண்டாள் தன் திருப்பாவையின் 18வது பாசுரத்தில் மகாலட்சுமியின் ஸ்வரூபமான் நப்பின்னையைப் பற்றி பாடுகிறாள்’ என்றார்.