மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் விதிமீறி கட்டட பணியால் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2026 10:01
கடம்பத்துார்: மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி, ஆகம விதிமீறி கட்டட பணி நடந்து வருவது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பக்தர்கள் அ திர்ச்சியடைந்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு பகுதியில், 1057 ஆண்டுகள் பழமையான, ஆதித்த கரிகால சோழனால் கட்டப்பட்ட, சிங்கீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலைய துறையின் கீழ் இயங்கி வரும் இக்கோவில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், 2024 அக்டோபர் மாதம் கண்டெடுத்த இரு செப்பேடுகள், 1513-ம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந் தது என்றும், பலருக்கு அரசரால் நிலங்கள் தானமாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்ற ன என்றும், தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். தற்போது, இக்கோவில் வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்பட்டு வரும் மண்டபம் குறித்து, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சிங்கீஸ்வரர் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மண்டபம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.