திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோத்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று, வீரராகவர் கருடசேவையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோத்சவம், கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 24ம் தேதியுடன் நிறைவடையும் பிரம்மோத்சவத்தில், தினமும் காலை – மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவார்.
நிகழ்ச்சியின் மூன்றாவது நாளான நேற்று காலை 5:00 மணிக்கு கருட சேவை, கோபுர தரிசனம் நடந்தது. பின், கருட வாகனத்தில் பெருமாள், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு ஹனுமந்த வாகனம் நிகழ்ச்சி நடந்தது. தை அமாவாசையான இன்று, உற்சவர் பெருமாள், ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான தேரோட்டம், வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.