பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூக்குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 31ம் தேதி மயான பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலையில் சித்திர தேர் வடம் பிடிக்கப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வீதி உலா சென்று, குண்டம் அருகில் நிறுத்தப்பட்டது. இரவு 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் துவங்கியது. இரவு முழுவதும் குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டு, அதிகாலையில் குண்டம் முழுவதும் பரப்பப்பட்டது. விரதம் இருந்த பக்தர்கள், காப்பு கட்டி, ஆற்றில் நீராடி அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கும் இடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளி குப்புசாமி, மயான அருளாளி அருண் ஆகியோர் கோவிலிலிருந்து, அம்மனின் சூலத்துடன் வலம் வந்து குண்டம் இறங்கும் இடத்திற்கு வந்தனர். காலை 8:20 மணிக்கு குண்டம் இறங்குதல் துவங்கியது. முறைதாரர் மற்றும் அருளாளி குண்டத்தில் பூச்செண்டு உருட்டி இறங்கினர். அவர்களை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘மாசாணி தாயே’ என கோஷமிட்டபடி குண்டத்தில் இறங்கி வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தினர். விரதம் இருந்த போலீசார் உள்ளிட்டோரும் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்குவதை காண திரண்ட பக்தர்களும், ‘மாசாணி தாயே... அருள் புரிவாய்,’ என கோஷமிட்டனர். விழாவில், தக்கார் ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், துாய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.