பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை மற்றும் மாலை பூஜைகள் நடைபெற்றது. கடந்த மாதம் 31ம் தேதி மயான பூஜையும், கடந்த 3ம் தேதி குண்டம் திருவிழா நடந்தது. இதனைத்தொடர்ந்து, நேற்றுமுன்தினம் காலை 9:00 மணிக்கு கொடி இறக்குதல், 10:30 மணிக்கு மஞ்சள் நீராடல், இரவு 8:00 மணிக்கு மகாமுனி பூஜையும் நடைபெற்றது. மகாமுனி அருளாளி சுப்ரமணியை, வாண வேடிக்கையுடன் தலைமை முறைதாரர் மனோகர், அம்மன் அருளாளிகள் குப்புசாமி, அருண் மற்றும் முறைதாரர்கள், அருளாளிகள் அழைத்தனர். தொடர்ந்து அருள் வந்த மகாமுனி அருளாளி சுப்ரமணியை, சேலையால் கட்டி கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதன்பின் மகாமுனிக்கு, புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், இளநீர், மண் கலயத்தில் தண்ணீர், பழம் போன்றவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மகாமுனி அருளாளி, படையல் சாப்பாட்டை சாப்பிட்டபடியே கோவிலை சுற்றி வலம் வந்தார். மகாமுனியின் படையலுக்காக பெண்கள் காத்திருந்தனர். படையல் பிரசாதம் கிடைத்த பெண்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். தக்கார் ராஜ்குமார், கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று மகா அபிேஷகம், அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.