கோவை: மதுக்கரை ரோடு, ரயில்வே மேம்பாலம் அருகே, மோகன் நகரில் சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், புனரமைப்பு வேலைகள் முடிந்து கும்பாபிஷேக விழா, கடந்த 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து முதல் கால பூஜையும், 24ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால பூஜைகளும் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு நான்காம் கால பூஜையை தொடர்ந்து, 9 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 9.24 மணி முதல் 9.32 மணிக்குள், சக்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு மகா அபிஷேகம், தச தரிசனம், கோ பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில், மதுக்கரையைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.