கடலுார் மாவட்டம், நெய்வேலி, வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காவடி உற்சவம் இன்று நடந்தது. நெய்வேலி மட்டுமின்றி இந்திரா நகர், வடக்குத்து, வடலுார், மந்தாரக்குப்பம், முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி சுமந்து கோவிலுக்கு வந்தனர். மேலும், பக்தர்கள் அலகு குத்திக்கொண்டும், பால்குடம் சுமந்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதுதவிர நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 18ல் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 1008 காவடி சுமந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக அரோகரா கோஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வேலுடையான்பட்டு முருகன் கோவிலுக்கு வந்தடைந்தனர். நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.