மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், நிலமங்கை தாயார் பங்குனி உத்திர உத்சவம், நேற்று விமரிசையாக நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், மாமல்லபுரத்தில், பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர உத்சவம், கடந்த மார்ச் 23ம் தேதி துவங்கியது. இதில், தாயார் திருமஞ்சனம் கண்டு, பூதத்தாழ்வாருக்கு மரியாதை செய்தார். ஹம்சம், யானை, குதிரை, சூரிய, சந்திர பிரபைகள் உள்ளிட்ட வாகனங்களில் என, தினம் ஒரு வாகனத்தில் உள்புறப்பாடு உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி உத்திர நாளான நேற்று காலை 7:30 மணிக்கு, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், பூதத்தாழ்வார் ஆகிய சுவாமியர், சிறப்பு திருமஞ்சன வழிபாடு கண்டனர். தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு, தம்பதி சுவாமியர், பூதத்தாழ்வார் ஆகியோர் மகாமண்டபத்தில் வீற்று, மதியம் 12:30 மணி வரை, வேதமந்திரங்கள் முழங்கி, ஸ்ரீசுக்த ஹோமம் நடந்தது. மாலை, ஸ்தலசயன பெருமாள், மாப்பிள்ளை ஊர்வலம் சென்று, கோவிலை அடைந்ததும், நிலமங்கை தாயாருடன் மாலை மாற்றி, திருக்கல்யாணம், தொடர்ந்து சேர்த்திசேவையுடன் நிறைவடைந்தது.