பதிவு செய்த நாள்
16
ஜன
2013
11:01
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவம், பழையசீவரம் கிராமத்தில் கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மாட்டுப் பொங்கல் அன்று பழையசீவரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளும், பார்வேட்டை உற்சவம் நேற்று நடந்தது.திருமஞ்சனம்காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவில் உற்சவர், நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க பக்தர்கள் புடைசூழ பழைசீவரம் புறப்பட்டு சென்றார். நேற்று காலை 8:30 மணிக்கு பழையசீவரம் மலை மீதுள்ள லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் மலை மீதுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். மாலை 5:30 மணிக்கு, பெருமாள் மலையில் இருந்து கீழே இறங்கி, லட்சுமி நரசிம்மருடன், திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப்பெருமாள் கோவில் வளாகத்தில், உள்ள மண்டபத்திற்கு சென்றடைந்தார். கோவில் வளாகத்தில், பெருமாளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு, அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.தனி மண்டபங்களில்...பிற மண்டபங்களில், வரதராஜப்பெருமாள், லஷ்மி நரசிம்மப் பெருமாள், அப்பன் வெங்கடேசப்பெருமாள், சாலவாக்கம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், காவாந்தண்டலம் லட்சுமி நாராயணப் பெருமாள் ஆகியோர் தனித் தனி மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விஜயன் தலைமையில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் வரதராஜப்பெருமாள் திருமுக்கூடல் கிராமத்திற்கு சென்றார். அங்கு சிறப்பு தீபாராதனைக்கு பின், அங்கம்பாக்கம், அவளூர் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக மீண்டும் காஞ்சிபுரம் வந்தடைவார்.