சபரிமலை வழிபாட்டு விவகாரம் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
பதிவு செய்த நாள்
08
ஏப் 2026 11:04
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரும் விவகாரத்தில், தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளுக்கு ஆதரவாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளது. குறிப்பாக மத நம்பிக்கைகள், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டவை என விளக்கம் அளித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது சபரிமலை அய்யப்பன் கோவில். 48 நாள் பிரம்மச்சரிய விரதம் இருந்து, இருமுடி கட்டியே இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது விரத நியமங்களாக வகுக்கப்பட்டுள்ளது. தனித்துவ பண்புகள்: தவிர 10 வயதுக்குட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலை அய்யப்பனை தரிசிக்கலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில், இந்த வழிபாட்டு முறை பாலின சமத்துவத்துக்கும், மத சுதந்திரத்திற்கும் எதிராக இருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த, 2018ல் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என, உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2019ல் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான, ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, வழக்கை 9 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இதையடுத்து, இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை எதிர்த்து, அவர் முன்வைத்த வாதம்: நம் நாட்டில் பிரதானமாக ஒரு மதம் மட்டுமே இல்லை. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்துவ பண்புகள் இருக்கின்றன. மத நம்பிக்கையை பகுத்தறிவு அல்லது அறிவியல் அடிப்படையில் ஆராய கூடாது. அறிவியலால் விளக்க முடியாத சர்வ வல்லமை படைத்த ஒரு சக்தியின் மீது பலர் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. கால அவகாசம்: அதேசமயம், நரபலி அத்தியாவசியமான மத சடங்கு, அடிப்படை உரிமை என கூறி ஒருவர் நீதிமன்றத்தை அணுகினால், அதை மத நம்பிக்கையின் அடிப்படையில் ஆராய வேண்டிய அவசியமே இல்லை. சட்டவிரோதமானது எனக் கூறி அப்படியே நிராகரிக்கலாம். சபரிமலை விவகாரம் என்பது மத நம்பிக்கை மற்றும் குறிப்பிட்ட பிரிவினரின் தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒரு மசூதிக்கோ, குருத்வாராவுக்கோ செல்லும்போது தலையை மூடியபடி செல்ல வேண்டும். அந்த நடைமுறையை தனிநபர் சுதந்திர பறிப்பு என கூற முடியாது. அரசியல் சாசனத்தில் அறநெறி என்ற சொல் மதம் சார்ந்த ஒழுக்கத்தையே குறிக்கிறது. அதை விரிவுபடுத்தி, அரசியல் சாசன அறநெறி என மாற்றுவது நீதித்துறை மீறல் மட்டுமின்றி, அரசியல்சாசன திருத்தத்திற்கு ஒப்பானது. மதக் கோட்பாடுகளில் நீதித்துறை தலையிட முயல்வது சில நேரங்களில் ஆபத்தானது. ஏனெனில் சம்பந்தப்பட்ட மதம் சார்ந்த விஷயங்களில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களிடமோ, அதன் புனித நுால்களிலோ, குறிப்புகளில் இருப்பதையோ நீதிமன்றம் ஆராய்வதில்லை. எனவே, மத நம்பிக்கைகள் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டவை. இவ்வாறு அவர் வாதாடினார். இதைத் தொடர்ந்து, எதிர்தரப்பினர் தங்கள் வாதங்களை விரைவில் முடிக்க வேண்டும், கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனக்கூறி, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 22ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 7 கேள்விகள்: உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சபரிமலை விவகாரம் மட்டுமின்றி, மத சுதந்திரத்தின் வரம்புகள் என்ன? தனிநபர் மத உரிமைக்கும், ஒரு மதப் பிரிவின் கூட்டு உரிமைக்கும் உள்ள தொடர்பு, மதப் பிரிவுகளின் உரிமைகள், அறநெறி என்பதில் அரசியல்சாசன அறநெறி அடங்குமா? ஹிந்துக்களின் ஒரு பிரிவு என்பதின் பொருள் என்ன? மாற்று மதத்தை சார்ந்தவர், பொதுநல வழக்கு மூலம் ஹிந்து மத நடைமுறைகளை எதிர்க்க முடியுமா? உள்ளிட்ட ஏழு கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சபரிமலை கோவில் வழிபாட்டுக்கும்,பெண்களின் மாதவிடாய்க்கும் சம்பந்தம் இல்லை. நாடு முழுதும் அய்யப்பன் கோவில் இருக்கிறது. அங்கெல்லாம் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சபரிமலையில் அய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால், குறிப்பிட்ட வயது உடைய பெண்களுக்கு அனுமதி தரப்படுவதில்லை. இது சட்டத்தில் வகைபடுத்த முடியாத வழக்கு. - துஷார் மேத்தா சொலிசிட்டர் ஜெனரல்
|