பதிவு செய்த நாள்
17
ஜன
2013
11:01
திருத்தணி : காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, உற்சவர் முருகர், திருத்தணி நகர வீதிகளில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் திருவிழா ஒட்டி மூன்று நாட்கள் உற்சவர் முருகர், மலைக் கோவில் வளாகத்தில் இருந்து இறங்கி, வீதிகள் தோறும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.அதன்படி, பொங்கல் நாள் (முதல் நாள்) அன்று மலைக்கோவில் பின்புறம் உள்ள அர்ச்சகர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில், வலம் வந்து அருள்பாலித்தார். ஜன 16 முன்தினம், (இரண்டாவது நாள்) மேல் திருத்தணி பகுதியில் உள்ள தெருக்களில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஜன 16, திருத்தணி நகரில் வீதியுலா வந்து முருகப் பெருமான் அருள்பாலித்தார்.இதற்காக, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் மலைப்படிகள் வழியாக திருத்தணி சுமைதாரர்கள் தோளில் சுமந்துவாறு, சரணவப்பொய்கை அடைந்தனர்.பின்னர், அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், உற்சவர் முருகர் புறப்பட்டு, சன்னிதி தெரு, பெரிய தெரு, பஜார் தெரு, காந்திரோடு வழியாக மாலை, 6:00 மணிக்கு ரெட்டிகுளம் வந்தடைந்தார். அங்கு உள்ள மண்டபத்தில் உற்சவருக்கு பால், பன்னீர், தேன், விபூதி போன்ற பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. முருகர் திருவீதி உலா வருவதை ஒட்டி, தெருக்களில் பெண்கள் வண்ண, வண்ண கோலங்கள் இட்டும், தேங்காய் உடைத்து பூஜை செய்தும் வழிப்பட்டனர்.