பதிவு செய்த நாள்
17
ஜன
2013
11:01
படப்பை : படப்பை, கங்கையம்மன் கோவில் குளம் பராமரிப்பில்லாமல் வீணாகி வருகிறது. குளத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் ஆனஞ்சேரி, சண்முகா நகர், அம்பேத்கர் நகர், பெரியார் நகர், கலைஞர் நகர், ஆஷா நகர், அண்ணா நகர், மேல்படப்பை, கீழ்படப்பை, முருகாத்தம்மன் பேட்டை உள்ளிட்ட பகுதியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. படப்பை, வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள கங்கை அம்மன் கோவில் குளம் உள்ளது. இது, அப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சண்முகா நகர், ஊரணி மேம்பாடு திட்டத்தின் கீழ், 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளம் தூர் வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. மேலும், 6 லட்சம் ரூபாய் செலவில், குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. துர்நாற்றம் தற்போது, இந்த குளம் முறையாக பராமரிக்கப்படவில்லை. குளத்தின் ஒரு பகுதியில், சுற்றுச்சுவர் கட்டாமல் விடப்பட்டுள்ளது. குளம் முழுவதும் செடிகள், கொடிகள் வளர்ந்து பாசி படர்ந்து உள்ளன. குளத்தை சுற்றி உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதால், நீர் மாசடைந்துள்ளது. குளத்தின் கரை பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறிவிட்டது. இதனால் இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. கோரிக்கை மேலும், குளத்தின் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால், இங்கு உணவுத் தேடி பன்றிகள் அதிக அளவில் வருகின்றன. இதனால், இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: படப்பையின் மையப்பகுதியில், பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படும் இடத்தின் அருகே அமைந்துள்ள இந்த குளம் மிகப்பெரியது. குளத்தை சுற்றி, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, மின்விளக்குகள் அமைத்து, அழகு செடிகளை வளர்த்து, குளத்தை அழகு படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.