பதிவு செய்த நாள்
17
ஜன
2013
11:01
திருக்கழுக்குன்றம் : வேதகீரிஸ்வரர் மலை கோவில் கிரிவல பாதையில், சாலை அமைக்கும் பணிகள் தாமதமாவதால், ஜல்லி கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால், பக்தர்கள் அவதிபட்டு வருகின்றனர். திருக்கழுக்குன்றத்தில், வேதகீரிஸ்வரர் கோவில், மலையில் அமைந்து உள்ளது. இந்த மலை, நான்கு வேதங்களால் உருவானவை என்பதால், பவுர்ணமி தோறும் இங்கு கிரிவலம் நடக்கிறது. கிரிவல சாலை குறுகிய அளவில் இருந்ததால், பக்தர்கள் நடந்து செல்லும் போது நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து, கிரிவல சாலையை அகலபடுத்த, பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ், 36 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது. கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் பணிகள் துவங்கின. ஆனால், பணிகளில் இழுபறி ஏற்பட்டு, நிறுத்தப்பட்டது. பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளதால், ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளன. இதனால், கிரிவலம் செல்லும் பக்தர்கள், நடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து, பக்தர்கள் சிலர் கூறுகையில், "கிரிவல பாதையில் நடந்து செல்லும்போது, சாலையில் உள்ள ஜல்லி கற்கள் கால்களை பதம் பார்க்கின்றன. சிலர் கால்களில் ரத்த காயம் ஏற்பட்டு, அவதிப்படுகின்றனர் என்றனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல்அலுவலர் கூறுகையில்,""மழையின் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.