பதிவு செய்த நாள்
17
ஜன
2013
11:01
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரின் திம்மசமுத்திரம் பாரிவேட்டை உற்சவம், கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், ஒவ்வொரு ஆண்டும், காணும் பொங்கலையொட்டி, திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள, திரிபுராந்தகேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளுவார். இந்நிகழ்ச்சி, பாரிவேட்டை உற்சவம் என, அழைக்கப்படுகிறது. அபிஷேகம் இந்த ஆண்டுக்கான பாரிவேட்டை உற்சவத்தை முன்னிட்டு, காலை 5:30 மணிக்கு, ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகம், 6:00 மணிக்கு ஏகாம்பரநாதர் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. காலை 7:20 மணிக்கு ஏகாம்பரநாதர், கோவிலில் இருந்து பாரி வேட்டைக்கு புறப்பட்டார். வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம், சிறப்பு நாதஸ்வரம், டமாரம், திருவண்ணாமலை உடல் வாத்தியம், 20 அலங்கார குடை, சிவபூதப்படை, கேரள ஜண்டை வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்சியுடன், அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் புடை சூழ, சுவாமி ஏலவார்குழலியுடன் திம்மசமுத்திரம் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றார். உற்சாக வரவேற்பு பகல் 1:30 மணிக்கு திரிபுராந்தகேஸ்வரர் கோவிலை சென்றடைந்தார். வழிநெடுகிலும் மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் சுவாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவிலில், உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின், நாதஸ்வர இசைக்கச்சேரி, திருமுறை ஓதுதல், சொற்பொழிவு, தீபாராதனை நடைபெற்றது. இரவு 8:00 மணிக்கு சுவாமி மீண்டும் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.