விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு பலன் 2026 – 2027
பதிவு செய்த நாள்
13
ஏப் 2026 01:04
விருச்சிகம்: விசாகம்: நல்லநேரம் வந்தாச்சு ஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ வருடம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வருடத்தின் தொடக்கமே வசந்த காலமாகும், குடும்பம், தொழில், உத்தியோகம் என்று எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 26 முதல் பாக்ய குருவும், நவ.13 முதல் சகாய ஸ்தான ராகுவும் வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர், ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்போடும் வாழ வைப்பர். சனி சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், சோதனைகளையும் வேதனைகளையும் சுமந்து வாழ்ந்து வந்த உங்களை சாதனைகள் புரிய வைப்பார், எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்ற நிலையினை உண்டாக்குவார், ஆரோக்கியத்தை மேம்படுத்துவார், செல்வாக்கை உயர்த்துவார், வம்பு வழக்குகளில் வெற்றியை அளிப்பார், அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி என்று உயர்வினை ஏற்படுத்துவார், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் நிம்மதியையும், வியாபாரம் தொழிலில் லாபத்தையும், பொருளாதாரத்தில் உயர்வினையும் உண்டாக்குவார். ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பணவரவு அதிகரிக்கும், பொருளாதார நிலை உயரும், வசதி வாய்ப்புகள் உண்டாகும், நவ. 13 முதல், பத்தாம் இடத்தில் கேதுவும், நான்காம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும், உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நன்மையாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் நிதானம் தேவை, அதன்பின் மூன்றாமிட ராகுவால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும், வரவேண்டிய பணம் வரும், துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குரு சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை பாக்ய குரு சுபிட்சமான நிலையை ஏற்படுத்துவார், சமூகத்தில் உங்கள் நிலை உயரும், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும், அதன்பின் குருவின் பார்வைகள் உங்களைப் பாதுகாக்கும். 4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதுடன் உங்கள் ராசியையும், ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்ப்பதால் சங்கடங்கள் எல்லாம் விலகும், குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும், பணம், புகழ், அந்தஸ்து ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சூரிய சஞ்சாரம்: விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆத்ம காரகனான சூரியன், மார்கழி, பங்குனி, ஆடி, ஆவணி ஆகிய நான்கு மாதங்களும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தை, சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய நான்கு மாதங்களும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், உடல்நிலை சீராகும், எதிர்ப்பு வம்பு வழக்கு என்பதெல்லாம் வந்த வழி தெரியாமல் போகும். வேலையில் உயர்வு ஏற்படும், வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், புதிய தொழில் தொடங்க முடியும், பணவரவு அதிகரிக்கும், கடன்தொல்லை விலகும், வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். பொதுப்பலன்: பராபவ வருடத்தில் உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும், மறைந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும், திருமண முயற்சி வெற்றியாகும், குழந்தை பாக்யம் கிடைக்கும், ஆரோக்கியம் சீராக இருக்கும், நோய்நொடிகள் விலகும், சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற நீண்டநாள் கனவு நனவாகும், செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும். தொழில்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும், போட்டியாளர்கள் பலமிழப்பர், பணியாளர்கள் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வர்த்தகம், ரசாயன தொழில்கள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், உணவகம், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல் ஏஜென்சி, பில்டிங் டிசைனிங் அண்ட் டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வளர்ச்சி அடையும். பணியாளர்கள்: வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும், திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய மரியாதைக் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள வேலையைவிட வேறு இடத்தில் அதிக சம்பளத்துடன் வேலைக்கிடைக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட போராட்டநிலை மாறும். தடைபட்ட பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். பெண்கள்: குரு பகவானின் அம்சமான உங்களுக்கு குடும்பத்தில் மதிப்பு ஏற்படும், வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும், கணவரின் ஆதரவால் துணிச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும், கையிருப்பு கூடும், பொன் பொருள் சேரும், உறவுகள் மத்தியில் மதிப்புடன் வாழ்வீர்கள். கல்வி: பிறரை வழி நடத்துவதற்காகவே பிறந்த உங்களுக்கு, பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், பொறியியல், மருத்துவம், சட்டம் என்று விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். உடல்நிலை: மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவரை சந்தித்து மருந்து மாத்திரை என்று வாழ்ந்து வந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள். சிலருக்கு மாற்று சிகிச்சையால் நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பம்: பராபவ வருடம் குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும் வருடமாக இருக்கும், ஆளுக்கொரு திசையாக இருந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்ற எண்ணத்துடன் வாழத் தொடங்குவீர்கள். சொந்த வீடு, வாகனம், பொன் பொருள், சேமிப்பு என்று வாழ்க்கை வளமாகும். குடும்பத்தில் மங்கள ஒசை கேட்கும். பரிகாரம்: திருத்தங்கல் நின்ற நாராயணரை வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும், நிம்மதி உண்டாகும். அனுஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும் தைரிய வீரிய காரகனான செவ்வாய், கர்மக்காரகன் சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் முன்னேற்றமான வருடமாக இருக்கும். கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், பணப்புழக்கம் அதிகரிக்கும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சனி சஞ்சாரம்: அர்த்தாஷ்டம சனிக்காலம் முடிந்திருப்பதால் ராசியை விட்டு சனி பகவானின் பார்வை விலகி இருக்கிறது என்பதே உங்களுக்கு நன்மையாகும். முன்பிருந்த அளவிற்கு இப்போது நெருக்கடிகள் இருக்காது, லாப ஸ்தானத்திற்கு சனி பகவானின் பார்வை உண்டாவதால் வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும், வரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் நன்றாகப்பழகி வந்தவர்களுடன் ஒரு இடைவெளி ஏற்படும். குடும்பத்திலும் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் நேரம் காலம் அறிந்து சந்தர்ப்ப சூழ்நிலை உணர்ந்து, அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது நன்மையாகும். ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.13 வரை வியாபாரத்தில் உங்களுடைய நேரடி கண்காணிப்பு தேவை, உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வது அவசியம். வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் உடல்நிலையிலும் கூடுதல் கவனம் தேவை. நவ.13 முதல் சகாய ஸ்தானமான மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், பயந்து பயந்து வாழ்ந்த நிலைமாறி செல்வாக்கோடு நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். குரு சஞ்சாரம்: மே 26 வரை குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றாலும் அவருடைய பார்வைகள் வீண் அலைச்சலையும் செலவுகளையும் கட்டுப்படுத்தும், குடும்பத்தில் நிம்மதியான நிலையை உண்டாக்கும், பணப்புழக்கத்தை ஏற்படுத்தும், மார்ச் 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பவர் உங்கள் ராசியையும், ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்ப்பதால் உங்கள் வாழ்க்கை வளமாகும், நீண்டநாள் கனவுகள் நனவாகும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும், பணம், புகழ், அந்தஸ்து ஏற்படும், பிள்ளைகள் நலனுக்காக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன், தை, சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய நான்கு மாதங்களும் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் மற்ற கிரகங்களால் எதிர்மறையான பலன்கள் ஏற்பட்டாலும் அவை உங்களை நெருங்காமல் போகும், வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும், வேலை மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு வம்பு வழக்கு எல்லாம் வந்தவழி தெரியாமல் போகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும், புதிய தொழில் தொடங்க முடியும், பணவரவு அதிகரிக்கும், அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். பொதுப்பலன்: பராபவ வருடம் உங்களுக்கு யோகமான வருடமாகும், எந்த முயற்சியும் நடக்கவில்லை, எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை, மனதில் நிம்மதியில்லை என்று வாழ்ந்து வந்தவர்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் எல்லாம் விலகும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். ஆரோக்கியம் சீராகும், நோய்நொடிகள் விலகும், சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற நீண்டநாள் கனவு நனவாகும். தொழில்: ராசியை விட்டு சனி பகவானின் பார்வை விலகியதால் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள், லாப ஸ்தானத்திற்கு தொழில் காரகனின் பார்வை கிடைப்பதால் நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் இனி லாபமடையும், விவசாயம் சார்ந்த தொழில்கள், செங்கல் தயாரிப்பு, எம்சாண்ட், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், சிறு குறு தொழிற்சாலைகள், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், இன்ஜினியரிங் பேக்டரி, உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, வாகன விற்பனை, ட்ராவல்ஸ், கெமிக்கல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், விளையாட்டுப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை, கம்ப்யூட்டர், பொறியியல், ட்ராவல் ஏஜென்சி, ஹார்டுவேர் தொழில்கள் வளர்ச்சி அடையும். பணியாளர்கள்: என்னதான் உழைத்தாலும் நல்ல பெயரும் இல்லை, திறமைக்கேற்ற மரியாதையும் இல்லை என்று வருத்தத்தோடு இருந்தவர்களுக்கு இதுவரை இருந்த நிலையில் மாற்றம் ஏற்படும், நிர்வாகம் உங்களுக்குரிய இடத்தையும் சலுகைகளையும் வழங்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும், தடைபட்ட இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். பெண்கள்: மனதில் இருந்த சங்கடங்களும் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பும் விலகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும், வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு வேலைக்கிடைக்கும், கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், வசதி வாய்ப்புகளோடு வாழும் நிலை உண்டாகும். கல்வி: படிப்பில் மந்தமாக இருந்தவர்களுக்கும் படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும், உயர் கல்வி கனவு நனவாகும். உடல்நிலை: அர்த்தாஷ்டம சனியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு இனி மாற்றம் ஏற்படும், உடல்நிலை சீராகும், உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பம்: குடும்பம் நன்றாக இருந்தால்தான் நாம் வெளியில் கவுரவமாக நடைபோடமுடியும் என்பதை உணர்வீர்கள், தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு விலகும், பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும், கடன் பட்டாவது சொந்த வீடு, வாகனம், நவீன பொருட்கள் என்று வாங்குவீர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வீர்கள். பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடங்கள் விலகும், நன்மைகள் நடக்கும். கேட்டை: முயற்சி வெற்றி தரும் வித்யா காரகன் புதன், தைரிய வீரிய காரகன் செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ வருடம் நெருக்கடிகள் நீங்கும் வருடமாக இருக்கும், நினைத்த வேலைகள் நடந்தேறும், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும், விருப்பங்கள் பூர்த்தியாகும், எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சனி சஞ்சாரம்: பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், தனது 3,7,10ம் பார்வைகளால் உங்கள் ராசிக்கு 7,11,2ம் இடங்களைப் பார்ப்பதால் பூர்வீக சொத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம், மனதில் குழப்பம், சபலம், சஞ்சலம், உயர் கல்வியில் தடை, தம்பதிக்குள் பிரச்னை, நட்பிற்குள் இடைவெளி என்று ஏற்பட்டாலும் கையில் பணம் புழங்கும், பண வரவு அதிகரிக்கும், வசதி வாய்ப்புகள் ஏற்படும். ராகு - கேது சஞ்சாரம்: நவ. 13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பிறகு ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.13 வரை செய்துவரும் தொழிலில் அக்கறை செலுத்துவது அவசியம், மாத ஊதியம் பெறுபவர்கள் மேலிருப்போரின் கண்காணிப்பிற்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் பார்த்துவரும் வேலையில் நேர்மையாகவும் முழு ஈடுபாட்டுடனும் இருப்பது நன்மையாகும். நவ.13 முதல் சகாய ஸ்தானமான மூன்றாமிடத்தில் ராகு சஞ்சரிப்பதால் மந்திரம் போட்டதுபோல் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும், வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும், மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை சாதித்திடக்கூடிய வலிமையும் திறமையும் உண்டாகும். குரு சஞ்சாரம்: மே 26 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் 12,2,4ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும், எதிர்பார்த்த பணம் வரும், விருப்பங்கள் பூர்த்தியாகும், வீண் செலவுகள் குறையும். மார்ச் 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பவர், அவருடைய பார்வைகளால் உங்கள் ராசியையும், 3,5ம் இடங்களையும் பார்ப்பதால் நீண்டநாள் கனவுகள் நனவாகும், முயற்சி வெற்றியாகும், செல்வம் செல்வாக்குடன் வாழும் நிலை உருவாகும், ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்ப்பதால் இதுவரை இருந்த பிரச்னைகள் எல்லாம் விலகும், சிலருக்கு காதல் கை கூடும், பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும், பிள்ளைகளால் பெருமை உண்டாகும், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும், பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடிவருவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சூரிய சஞ்சாரம்: ஆத்ம காரகனான சூரியன் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த ஜாதகரின் நிலையை உயர்த்துவார், எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வார், வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார், வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், பொருளாதார நிலையை மேம்படுத்துவார், அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதிகளைக் கிடைக்க வைப்பார், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை வழங்குவார், சிலருக்கு உத்தியோகத்தையும் வழங்குவார், சட்ட சிக்கல்களில் இருந்து விடுவிப்பார் அந்த நிலையில், பராபவ வருடத்தில் தை, சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு யோகமான மாதங்களாவே இருக்கும். பொதுப்பலன்: பராபவ வருடம் உங்கள் வாழ்வில் வளமான வருடமாக இருக்கும், செல்வாக்குடனும் அந்தஸ்துடனும் உங்களால் வாழமுடியும், இழுபறியாக இருந்த வேலைகள் முடியும், எதிர்பார்த்த பணம்வரும், கடன்தொல்லை விலகும், பட்டம், பதவி, அரசுவேலை, சுயதொழில் என்று உங்கள் நிலை உயரும். திக்கற்றிருந்த நேரத்தில் துணையாக இருந்த தெய்வத்தின் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். தொழில்: புதபகவான் எடுத்த வேலையை எடுத்த வேகத்தில் செய்து முடித்திடக்கூடிய திறமையை வழங்குவார். செவ்வாய் அம்சத்தில் பிறந்த நீங்கள் போடும் கணக்கு சரியாகவே இருக்கும், ஒரு முயற்சியில் தோல்வி ஏற்பட்டாலும் அதற்கான காரணத்தை கண்டறியும் உங்களுக்கு, பராபவ வருடம் சுய தொழிலில் வெற்றியடையும் வருடமாகவே இருக்கும். சிறு வியாபாரம், பெரும் வர்த்தகம், நிதி நிறுவனம், ஸ்டேஷனரி, அச்சகம், செய்தித்தாள், நோட்டுப் புத்தகம், காலண்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை, தகவல் தொடர்பு, விளம்பரம், ஷேர் மார்க்கெட், காண்ட்ராக்ட், கமிஷன் ஏஜென்சி, கூட்டுத்தொழில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், மருத்துவம், ரசாயனம், ட்ராவல் ஏஜென்சி, தனியார் பள்ளிகள் கல்லூரிகள் வளர்ச்சி அடையும், வருமானம் தரும். பணியாளர்கள்: வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதி இல்லை, பார்க்கும் வேலைக்குரிய சம்பளமும் இல்லை என வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலைமாறும். உங்களுக்குரிய அங்கீகாரமும், சம்பளத்துடன் கூடிய சலுகைகளும் கிடைக்கும், சிலருக்கு பெரிய நிறுவனங்களிடம் இருந்து அழைப்பு வரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த போராட்டநிலை மாறும், தடைபட்ட பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும். பெண்கள்: மன ரீதியாக சங்கடப்பட்டதுடன், உடல் ரீதியாகவும் நலிவினை சந்தித்துவந்த நிலைமாறும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் கனவு நனவாகும். குடும்பத்தில் மரியாதை கூடும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட இடைவெளி விலகும், பணிபுரியும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் உயரும். பொன் பொருள் சேரும். கல்வி: இயல்பாகவே படிப்பில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு தேர்வு முடிவு மகிழ்ச்சியை அளிக்கும், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும், மருத்துவம், சட்டம், பொறியியல் என்ற உங்கள் கனவுகள் நனவாகும். உடல்நிலை: மருந்து மாத்திரை மருத்துவமனை என்று தொடர்ந்து சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். மருத்துவ செலவுகள் குறையும், ஆரோக்கியம் மேம்படும், சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். மூச்சுத்திணறல், நரம்புக்கோளாறு, ரகசியநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் நவீன மருத்துவத்தால் குணமடைவர். குடும்பம்: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள், பிரச்னைகள் விலகும், எதிர்காலம் பற்றிய அக்கறை உண்டாகும், பணத்தை சேமிப்பதில் கவனம் செல்லும், செலவுகளையும் திட்டமிட்டு ஆதாய நோக்கதுடன் மட்டுமே செய்வீர்கள். சொந்த இடம், வீடு, வாகனம் என்று வாங்குவீர்கள், தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்தும் ஆலோசித்தும் செயல்படுவீர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவமாக வாழ்வீர்கள், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பரிகாரம்: யோக நரசிம்ம பெருமாளை வழிபட்டுவர சங்கடங்கள் விலகும்.
|