சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவம்: கிணற்று நீர் வெளியேற்றும் பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2026 05:04
அய்யங்கார்குளம்: சித்ரா பவுர்ணமி உத்சவத்தையொட்டி, அய்யங்கார்குளம் நடவாவி கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றும் பணி இன்று தொடங்கியது.
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நடவாவி உத்வம், அய்யங்கார்குளம் கிராமத்தில் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டு சித்ரா பவுர்ணமியான மே 1ம் தேதி நடவாவி உத்சவம் நடக்கிறது. உத்சவத்தையொட்டி வரும் 30ம் தேதி இரவு 1:00 மணிக்கு, உபயநாச்சியாருடன் செவிலிமேடு கிராமத்தில் வீதியுலாவும், மே 1ம் தேதி காலை புஞ்சையரசந்தாங்கல், அப்துல்லாபுரம், துாசி, வாகை உள்ளிட்ட கிராமங்களில் வரதராஜ பெருமாளுக்கு மண்டகப்படியும் நடக்கிறது. மாலை அய்யங்கார்குளம் கிராமத்தில் வீதியுலாவாக சென்று இரவு 7:00 மணிக்கு சஞ்சீவராயர் கோவில் எழுந்தருள்கிறார். அங்கு பெருமாளுக்கும் உபய நாச்சியாருக்கும் திருமஞ்சனம் நடக்கிறது. அங்கிருந்து புறப்பாடாகி இரவு 9:00 மணிக்கு அப்பகுதியில் அமைந்துள்ள நடவாவி கிணறு என, அழைக்கப்படும் தரை மட்டத்திற்கு கீழ் உள்ள கிணற்று மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். உத்சவத்தையொட்டி நடவாவி கிணற்றில் உள்ள தண்ணீர் முழுதும் அகற்றும் பணி இன்று துவங்கியது. இதில், 10 எச்.பி., திறன் கொண்ட இரண்டு இன்ஜின் மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள நீர் முழுதும் வெளியேற்றப்படுகிறது. இப்பணி முடிந்ததும் கிணற்றின் உட்பகுதி சுத்தப்படுத்தும் பணி துவங்கப்பட உள்ளது.