மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: 1.5 லட்சம் பேருக்கு மகா விருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2026 03:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று காலை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இந்த மங்கல நிகழ்வைக் காணத் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் "திருக்கல்யாண விருந்து" மதுரை டவுன் ஹால் ரோடு பகுதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் உணவுத் தயாரிப்புப் பணியில் அருள்முருகன் பக்த சபை டிரஸ்ட் அமைப்பினர் மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். குறிப்பாக, மதுரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இன்று அதிகாலை முதலே காய்கறிகள் நறுக்குவது, உணவு பரிமாறுவது போன்ற பணிகளில் மிகுந்த பக்தியுடன் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்களின் ஒருங்கிணைப்பில் சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து பரிமாறி கொண்டு வருகின்றனர். பக்தர்களுக்கு, உணவுடன் சேர்த்து குளிர்ந்த நீர்மோர் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மலேசியாவில் இருந்து சில பக்தர்கள் உணவு பரிமாறும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மக்கள் மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டது குறிபிடத்தக்கது.