செஞ்சி ராஜகிரி கோட்டை மலை மீது ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கண்ணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பாரம்பரிய முறைப்படி தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ம் தேதி பீரங்கிமேடு மகாமாரியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து 9 நாட்கள் பூங்கரக ஊர்வலம், இரவு சாமி வீதி உலா, கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கை, அன்னதானம் ஆகியன நடந்து வந்தது. இன்று தேர் திருவிழாவை முன்னிட்டு கமலக்கண்ணியம்மன், ராஜகாளியம்மன், மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்தனர். ராஜகாளியம்மன், கமலக்கண்ணியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்தனர். கமலக்கண்ணியம்மனுக்கு கோட்டை வளாகத்திலும், புதுச்சேரி வாயில் அருகிலும் பாரம்பரிய முறைப்படி எருமை கிடா பலியிட்டனர். மாலை 3 மணிக்கு பீரங்கி மேடு மந்தை வெளியில் இருந்து தேர்பவனி புறப்பட்டது. திருவள்ளுவர் தெரு, திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் ரோடு, சத்திர தெரு வழியாக தேர் பவனி நடந்தது. சிவவாத்தியம், சென்டைமேளம், பம்பை உடுக்கையுடன் நடந்த தேர்பவனியில் ஆயிரக்கணக்காணவர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். ஏராளமானவர்கள் நாணயங்கள், காய் கனிகள், தானியங்களை வீசி நேர்த்தி கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை அரங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் அண்ணாதுறை உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.