பதிவு செய்த நாள்
19
மே
2026
07:05
பொதுவாக பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பற்றி, பல கனவுகள் இருக்கும். குடும்பத்தில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், கடன் வாங்கியாவது பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்ப்பர். ஆனால் சில சிறார்களுக்கு, கல்வியில் ஆர்வம் இருக்காது. டியூஷனுக்கு அனுப்பினாலும் பலன் இருக்காது.
சிலருக்கு படிப்பில் விருப்பம் இருந்தாலும், படித்தது நினைவில் இருக்காது. படிப்பு பிள்ளையின் மண்டையில் ஏறவில்லை என, பெற்றோர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். பிள்ளைகளுக்கு படிப்பு வரவில்லை என, கவலையில் வாழும் பெற்றோரின் கண்ணீரை துடைக்க, கொல்லுாரில் மூகாம்பிகை குடி கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் சிறார்களுக்கு கல்வி ஞானத்தை அளித்து, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் கோவில்கள் பல உள்ளன. இவற்றில், மூகாம்பிகை கோவிலும் ஒன்றாகும். குந்தாபூர் தாலுகா கல்வி மற்றும் அறிவை அருள்வதில், பிரசித்தி பெற்றவர். உடுப்பி மாவட்டம், குந்தாபூர் தாலுகாவில் உள்ள கொல்லுாரில், மூகாம்பிகை கோவில் உள்ளது. மூகாம்பிகை இங்கு சரஸ்வதி வடிவில் அருள் பாலிப்பதாக ஐதீகம். சரியாக படிப்பு வராத சிறார்களை, இக்கோவிலுக்கு அழைத்து வருவது, பல காலமாக நடந்து வரும் வழக்கமாகும்.
பள்ளியில் சேர்ப்பதற்கு முன், மூகாம்பிகை கோவிலுக்கு அழைத்து வந்து, அரிச்சுவடி எழுத வைப்பர். இங்குள்ள அர்ச்சகர் சிறார்களின் நாக்கின் மீது, தங்க குச்சியால் அல்லது தேனால், ஓம் என, எழுதுவார். அரிசியில் எழுத்துகளை எழுத வைப்பார். அப்படி செய்தால் அம்பாளின் அனுகிரகம் கிடைத்து, சிறார்களுக்கு அறிவு, கல்வித்திறன் அதிகரிக்கும். அவர்களின் வாழ்க்கை வளமாகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியில் வாழ்ந்துவந்த மூகாசுரன் என்ற ஒரு அசுரன், சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து, அரிய வரங்களை பெற்று விட்டான். இதனால் அவனது தலைகனம் அதிகமாகி மக்களையும், ரிஷிகளையும் துன்புறுத்தி வந்தான். இதனைக் கண்ட தேவர்கள், மக்களை காப்பாற்ற வேண்டி அம்பிகையிடம் முறையிட்டனர். இவர்களின் கோரிக்கைப்படி மூகாம்பிகையாக அவதரித்த அம்பிகை, மூகாசுரனிடம் போரிட்டு வென்றார். அம்பிகையிடம் அசுரன் சரணடைந்தான்.
தனது கர்வத்தை அடக்கிய அம்பாளிடம், ஒரு வேண்டுகோளை வைக்கிறான். தன்னை தோற்கடித்த அந்த இடத்திலேயே மூகாம்பிகையாக நிலை நின்று, மக்களை காக்க வேண்டும் என வேண்டினான். இதன்படி அம்பாளும் நிலை நின்றதாக, புராணங்கள் கூறுகின்றன. கோவிலின் கட்டட வடிவமைப்பு அற்புதமானது. கோவிலின் கர்ப்ப கிரகத்தை ஒட்டி விளக்கு கம்பம் உள்ளது. ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட, இந்த அழகான கம்பத்தில் ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம்.
அம்பாளின் கருவறை எதிரே பணிவுடன் அமர்ந்த நிலையில், சிம்ம வாகனம், கருவறையின் இரு புறமும், அழகான தியான மண்டபங்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இந்த மண்டபத்தில் தியானம் செய்து, மன அமைதி பெறுகின்றனர். கேரள கோவில்களில், ஆண்கள் சட்டை அணிந்து உள்ளே செல்லக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதே விதிமுறை கொல்லுார் மூகாம்பிகை கோவிலிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. கர்நாடகாவில் அதிக வருவாய் கொண்ட கோவில்களில், இதுவும் ஒன்றாகும்.