பதிவு செய்த நாள்
19
மே
2026
07:05
உத்தர கன்னடா மாவட்டம், கோகர்ணாவில் ஸ்ரீ பத்ரகாளி கோவில் அமைந்து உள்ளது.
புராணங்கள்படி, மூவுலகங்களையும் கைப்பற்றி, தேவர்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்த சக்தி வாய்ந்த அசுரன் விருத்திராசூரன். இவனை அழிக்க, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூம்மூர்த்திகளும் இணைந்து, துர்கையை உருவாக்கினர். துர்கையும், விருத்திராசூரனை வதம் செய்து, தேவர்களை காப்பாற்றினார். இதையடுத்து, அவருக்கு பத்ரகாளி என பெயர் சூட்டி, பூமியில், துன்பப்படும் பக்தர்களை காக்க, கோகர்ணாவுக்கு சிவன் அனுப்பி வைத்தார். அன்று முதல் கோகர்ணா மக்களை பாதுகாக்கும் சக்தி வாய்ந்த கடவுளாக பத்ரகாளி விளங்குகிறார்.
பத்ரகாளியை வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறுகிறது என்பதை பக்தர்கள் நம்புகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகை தந்து தரிசனம் செய்கின்றனர். எளிமையான முறையில் இக்கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் நுழைவு வாயிலின் இருபுறமும், இரண்டு சிங்கங்களும், இரண்டு போர் வீரர்களின் சிலைகளும் உள்ளன. கருவறையில், தேவியின் சிலை பெரிய கண்களுடனும், ஆயுதங்களை தாங்கிய நான்கு கைகளுடன், உக்ரமான கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
வெள்ளிக்கிழமை தோறும் பத்ரகாளியை தரிசிக்க திரளான பக்தர்கள் வருகின்றனர். நவராத்திரி திருவிழாவின் ஒன்பது நாட்களும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மழை காலத்தில் செல்வதை தவிர்க்கவும். அப்போது அளவுக்கு அதிகமாக மழை பெய்யும். எனவே, அக்டோபர், மார்ச் மாதங்களில் செல்வது சிறந்தது.