பதிவு செய்த நாள்
30
மே
2026
11:05
வை காசி விசாகம் முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய மிக அற்புதமான நாள். இந்த நாளின் சிறப்பம்சம் என்ன, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்... முருகனுக்கு உரிய வைகாசி விசாகம் திருநாள் இன்று வைகாசி 16ம் தேதி (மே 30) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளுக்குரிய சிறப்புகள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்... வைகாசி விசாகம் என்றால் என்ன? இளவேனிற் காலத்தின் பிற்பகுதி என்பதால் வைகாசி மாதம் வசந்த காலமாக இந்தியாவில் உள்ளது. எனவே இந்த வசந்த காலமான வைகாசி விசாக தினத்தில் கோயிலில் வசந்த உற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.
விசாக நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். முருகப்பெருமான் இந்த விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்று பெயர். வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் பயணம் என்று பொருள். மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்று பொருள்படும். ஆறுமுகன் அவதரித்த இந்த பவுர்ணமியுடன் கூடி வரக்கூடிய வைகாசி விசாக நட்சத்திரம் ஆகும். இந்த அற்புத வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும் அதே வேளை எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு முருகனின் அருளும், நீண்ட ஆயுள் கிடைக்கும். வைகாசி விசாகம் சிறப்புகள் இந்த விசேச தினத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இந்த திருநாளில் திருச்செந்தூர் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை அதில் இடுகின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவு படுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. மகாபாரதத்தின் வில் வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள். பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.
வைகாசி விசாக சுப தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புத நாள். தஞ்சை பெரிய கோயிலில் பொக்கிசமாகப் பல கல்வெட்டுகள் உள்ளன. அதில் பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக அரங்கேற்றுபவர்களுக்கு, ஆண்டுதோறும், வைகாசி விசாக தினத்தில் நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கி ராஜேந்திர சோழன் ஆணையைப் பிறப்பித்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலுாரில் நிறுவிய தினம். இந்த சிறப்பான நாளில் தான் பெரும்பாலான கோயில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், பல புகழ்களை அடைவர் என கருதப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் ராமன், -லட்சுமணனுக்கு முருகப்பெருமானின் பிறப்பு மற்றும் அவரின் அருமை பெருமைகளை விளக்கி கூறுவது போல அமைந்திருக்கும். இதை கேட்பவர்களுக்கு அவர்களின் பாவம் நீங்கி புண்ணியத்தை அடைவர் என்றும், இந்த நிகழ்வை குமார சம்பவம் என வால்மீகி குறிப்பிடுவார்.
இதை தழுவியே வட மொழி கவிஞர்கள் குறிப்பாக காளிதாசர் முருகப்பெருமானின் அவதாரம் குறித்து அவரின் நூலான குமார சம்பவம் என்று குறிப்பிடுகிறார். நேபாளத்தில் கபிலவஸ்து பேரரசர் சுத்தோனா கவுதமாவின் குமரன் சித்தார்த்தர் எனும் கவுதம புத்தர் வைகாசி விசாக புண்ணிய நாளில் தான் ஞானத்தை அடைந்த நாளாக கருதப்படுகிறது. இப்படி பல சிறப்புகள் நிறைந்த வைகாசி விசாக தினத்தில் நாமும் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கினால் ஞானமும், எல்லா வகை செல்வமும் கிடைத்து சிறப்பாக வாழலாம். தமிழ்நாட்டில், இறைவன் வடக்கு நோக்கி நிற்கும் ஒரே முருகன் கோயில் இதுதான். இக்கோயில் சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் பிரதம மந்திரியாகவும் இருந்த சேக்கிழார், இக்கோயில் அமைந்த இந்த இடத்தில்தான் பிறந்தார். மந்திரிப் பதவியைத் துறந்த பிறகு, அவர் பெரியபுராணம் என்ற நுாலை இயற்றினார். அவருக்குப் பாலரவாயர் என்ற ஒரு தம்பி இருந்தார். அவர் சேக்கிழாரின் வீட்டருகே ஒரு பெரிய குளத்தை அமைத்தார். அந்த குளம் தற்போது பாலரவாயர் குளம் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலின் அடிவாரத்தில் பதினாறு கால் மண்டபமும். அதை அடுத்து மலைக்கோயிலுக்கு செல்வதற்காக 84 (எண்பத்தி நான்கு) அகன்ற படிகட்டுகளும், ராஜகோபுர வாயிலில் ஆறு படிகட்டுகளும் அமைந்துள்ளன. ராஜகோபுரம் பெயருக்கு ஏற்ப குன்றின் மீது பஞ்சவண்ணம் தீட்டப்பட்ட நிலையில் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் காட்சி அளிக்கின்றது. திருக்கோயிலின் ராஜகோபுரம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலுக்கு தெற்கு திசையில் (திருக்கோயில் பின்புறமாக) சரவணபொய்கை என்ற தீர்த்த குளம் அமைந்துள்ளது.
குன்றத்துார் மலைக்கு இடப்புறமுள்ள மலைக்குன்றின் மீது திருக்கார்த்திகை தீபத்துாண் அமைந்துள்ளது. வருடாந்தோறும் திருக்கார்த்திகை தீபத்தன்று குன்றின் மீது அமைந்துள்ள தீபத்துாணில் பெரிய அகண்டம் வைத்து தீபம் ஏற்றப்படும். தீபத் திருநாளில் சென்னை மற்றும் புறநகரை சுற்றி உள்ள பக்தர்கள் வருகை புரிவார்கள். தீபத் திருநாளன்று சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனாவுடன் மாடவீதி உலா நடைபெறும்.
-திருவிழாக்கள் இந்தக் கோவிலில் பல முக்கியமான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் சில:
• மே-, ஜூன் மாதங்களில் வைகாசி விசாகம்
• அக்டோபர்,- நவம்பரில் கந்தசஷ்டி
• நவம்பர்,- டிசம்பர் மாதங்களில் திருக்கார்த்திகை
• ஜனவரியில் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு
• ஜனவரி-,பிப்ரவரியில் தைப்பூசம்
• தை கிருத்திகை மற்றும் பங்குனி உத்திரம்.
• மார்ச்-,ஏப்ரல் மாதங்களில் சித்திரை சஷ்டி மற்றும் ஆடி கிருத்திகை
-கோவில் நேரங்கள் காலை 6:30 மணி – மதியம் 12:30 மணி மாலை 4:00 மணி – இரவு 8:00 மணி
திருவிழாவின் போது தினசரி பூஜை நேரங்கள் மாறலாம்.
- அருகில் உள்ள விமான நிலையம்-: மீனம்பாக்கம்
ரயில் நிலையம்: - பல்லாவரம், தாம்பரம்
அரசு பேருந்து வசதி- தாம்பரம், பல்லாவரம், போரூர், பூந்தமல்லி மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து குன்றத்துாருக்கு நேரடி அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.