சென்னை அருகே குன்றத்துாரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பெரிய புராணம் அருளிச்செய்த தெய்வச் சேக்கிழார் பெருமான் அவரித்த திருத்தலம் குன்றத்துார் ஆகும். குன்று ஒன்று இவ்வூரில் உள்ளதால் குன்றத்துார் என்று பெயர் பெற்றது.
இக்குன்றின்மீது முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்து பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்பாலிக்கிறார்.
இக்கோவில் கருவறையில் ஒர் அதிசயமும் காணலாம். முருகன், வள்ளி, தெய்வானை என மூவராக இருந்தாலும் ஒரு சேர அவர்களை தரிசிக்க இயலாது. இங்கு ஒரு பக்கத்தில் நின்று பார்த்தால் வள்ளி – முருகனும், மறுபக்கத்தில் நின்று பார்த்தல் தெய்வானை – முருகனும் காட்சி அளிக்கிறார்கள்.
திருமணத் தடை, குழந்தை பாக்கியம் வேண்டி இக்கோவிலில் பலர் வழிபடு கின்றனர். ஆறு வாரம் செவ்வாய் கிழமை அன்று இக்கோவிலில் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதால் செவ்வாய் கிழமை இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
தல வரலாறு இந்துப் புராணங்களின்படி, திருப்போரூரிலிருந்து திருத்தணிகைக்குப் பயணம் செய்தபோது முருகன் இந்த மலையில் தங்கினார். அப்போது, முருகப்பெருமான், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார். முருகன் பூஜித்த அந்த ஈஸ்வரன், மலை அடிவாரத்தில் கந்தழீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இறைவன் தணிகையை நோக்கியவாறு வடக்குத் திசையில் காட்சியளிப்பதால், இந்த இடம் தென் தணிகை என்றும் அழைக்கப்படுகிறது.