பங்குனி உத்திரம், தைப்பூசம், திருக்கார்த்திகை போல வைகாசி விசாகம் என்பதும் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும். விசாகன், சுப்பிரமணியன், கந்தன் என பல்வேறு நாமங்கள் கொண்டு அருளும் தமிழ் கடவுளான முருகனை வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட எண்ணிய எல்லாம் கிட்டும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, மழலைச் செல்வம் வேண்டி விரதம் இருக்க கைமேல் பலன் கிடைக்கும்.
வைகாசி விசாகம் என்பது சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து அவதரித்து கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட ஆறுமுகக் கடவுளான முருகனின் அவதார திருநாளாகும். இன்று பால்குடம் எடுப்பதும், காவடி சுமப்பதும் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயில்களில் தங்கள் பிரார்த்தனைகளை செய்வதும், விரதம் இருப்பதும் உண்டு. முருகனுக்கு உகந்த செந்நிற மலர்களான செவ்வரளி, செம்பருத்தி மலர்களைக் கொண்டு வேலவனை அலங்கரித்து கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா, கந்தர் அலங்காரம் என பாராயணம் செய்ய விரும்பியது அனைத்தும் கிட்டும். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி போன்ற அறுபடை வீடுகளில் வைகாசி விசாக விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து வரலாம். இந்நாளில் குடை, செருப்பு, நீர்மோர், பானகம், தயிர் சாதம் என தானம் செய்ய குலம் தழைத்தோங்கும். அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை. வைகாசி விசாக விரதம் இருக்க, தம்பதியரிடையே ஒற்றுமை ஓங்கும். குலம் தழைக்க சந்ததியை பெற்று அமைதி சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வாங்கு வாழலாம்.