பதிவு செய்த நாள்
24
ஜன
2013
11:01
வாழப்பாடி: வாழப்பாடியில், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று, வெகு விமரிசையாக நடந்தது.
வாழப்பாடி, குமரவடிவேல் தெருவில், பழமையான சுப்பிரமணியர் கோவில் வளாகத்தில், ஸ்ரீவீரபத்திரர் சுப்பிரமணியர் டிரஸ்ட் சார்பில், 50 லட்சம் ரூபாய் செலவில் ஹரம்ப ஸ்ரீவிநாயகர், வள்ளி தெய்வானை சமோத சுப்பிரமணியர் மற்றும் விஷ்ணு துர்க்கையம்மன் திருக்கோவில் அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகவையொட்டி, கடந்த மூன்று தினங்களாக, யாக பூஜை ஸோதானம், ஆசார்யாவர்ணம், மண்டபார்ச்சனை, ஷண்முக ஷடாசர ஹோமங்களும், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கோபுர கலசங்கள் வைத்தல், ஸ்வாமி விக்ரகங்களுக்கு கண் திறப்பு, தனபூஜை, மூலஸ்தான தீபம் ஏற்றுதல், பூர்ணாஹூதி நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று அதிகாலை, 1 மணிக்கு மேல், நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மூலமந்திர ஹோமங்களும், அதிகாலை, 3 மணிக்கு மேல், விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கையம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேக விழா, வெகுவிமரிசையாக நடந்தது. தொடர்ந்து, மஹா அபிஷேகம், தசதானம், தசதரிசனம் மற்றும் பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சிகளும் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் பெற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, வாழப்பாடி ஸ்ரீ வீரபத்திரர் சுப்பிரமணியர் டிரஸ்ட் தலைவர் சுப்பராயன், செயலாளர் பாலமணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் ஆடிட்டர் சரவணன், கான்டிரக்டர் சந்திரசேகரன், ஆசிரியர் எம்கோ, சத்தியநாராயணன், ராஜமோகன், சுப்பராயன், ஆடிட்டர் ரமேஷ், வாசுகி கண்ணப்பன், இன்ஜினியர் நந்தக்குமார், ஆசிரியர் செல்லதுரை, பொள்ளாச்சி பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.