பதிவு செய்த நாள்
24
ஜன
2013
11:01
சேலம்: சேலம், சின்ன திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. சேலம் சின்ன திருப்பதியில், பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. 12 ஆண்டுகள் கழித்து, நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேத்துக்கு முன், ஜனவரி, 21, 22ம் தேதிகளில், கோவிலில், பல்வேறு யாக நிகழ்ச்சிகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டது. நேற்று அதிகாலை, 6 மணிக்கு சுப்ரபாதம், ஸ்தபநம், புண்ணியாஹம், அபிகமந ஆராதநனம், மஹா பூர்ணாஹுதி, பிரபந்த சாற்று மறை நிகழ்ச்சி நடந்தது. காலை, 8 மணிக்கு, கடம் புறப்பாட்டை தொடர்ந்து, 9 மணியில் இருந்து, 9.30 மணிவரை விமானங்கள் ஸ்ம்ப்ரோஷணம் நடந்தது. காலை, 10 மணிக்கு, கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு, பிரதம விஸ்வரூபதரிசனம், தான்யாதிகள் தரிசனம் மற்றும் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பகல், 2 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். சின்னதிருப்பதி, கன்னங்குறிச்சி, கோரிமேடு, ஏற்காடு அடிவாரம், அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்றனர்.