பதிவு செய்த நாள்
29
ஜூன்
2026
11:06
பனியன் தொழிலில் கொடி கட்டி பறக்கும் திருப்பூரில், மன நிம்மதியுடன் பக்தி செலுத்த பல கோவில்கள் உள்ளன. அவ்வகையில், நல்லுார் ஈஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படும், விஸ்வேஸ்வர சுவாமி கோவில், கி.பி 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது என, கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பூர்– காங்கயம், நெடுஞ்சாலையில், திருப்பூரில் இருந்து, ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள நல்லுாரில், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி விசாலாட்சியம்மன் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளன.
கொங்கு நாட்டு வழக்கப்படி ஓங்கி உயர்ந்த தீபஸ்தம்பம், 60 அடி உயரத்தில், ஒரே கல்லால் ஆன, தீப கம்பம், கம்பீரமாக காட்சியளிக்கிறது. கம்பத்தில், கிழக்கு நோக்கி அமர்ந்து, பக்தர்களை வரவேற்கிறார் விநாயகப்பெருமான். தமிழகத்தில் கிடைக்காத வெள்ளை நிற கற்களால், தீபஸ்தம்பமும், ராஜகோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகளும் காண்பேரை கவர்கின்றன.
கும்பாபிஷேகத்துக்கு பின், பேவர்பிளாக் தளம் அமைக்கும் போது, தீபகம்பத்தை சுற்றிலும், நீராழிப்பத்தி அமைக்கப்பட்டுள்ளது; அதில், அல்லி மற்றும் தாமரை மலர்களை வளர்க்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். ஒரே கல்லில் செய்த திரிசூலம்தான் நமக்கு முதலில் கண்ணுக்கு படுகிறது. கோவில் வளாகத்தில், தென்கிழக்கு பகுதியில், அரசமரமும், வேப்பமரமும் வளர்ந்துள்ளன. அங்குள்ள பட்டி விநாயகர், நாகர் சிற்பங்களுடன் அருள்பாலிப்பதன் வாயிலாக, மிகவும் பழமையானவர் என்பதை அறிய முடிகிறது. நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலின் அடையாளமே, பிரமாண்டமாக காட்சியளிக்கும் ஐந்துநிலை ராஜகோபுரம் தான். தரை மட்டத்தில் இருந்து, ஐந்து அடி உயரத்தில் இருந்தது. முதலில், 11 படிக்கட்டுகள் ஏறி செல்லும் படி இருந்தது. தற்போது, கோவிலின் முன் வளாகம், மேடாக்கி, கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
ஊர் கூடி தேர் இழுக்க வாருங்கள்!
இரண்டாம் ஆண்டு ஆனித்திருத்தேர் திருவிழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது; முன்னதாக, கணபதி ேஹாமத்துடன் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளும் செய்தனர். தினமும் காலையில், ஸ்ரீசந்திரசேகரர் –மனோன்மணி அம்மன், பல்லக்கில் திருவீதியுலா சென்று வருகின்றனர்; மதியம், சோமாஸ்கந்தர் மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையும், மாலையில், வாகன காட்சியும் நடைபெற்று வருகிறது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்த, இன்று (29ம் தேதி) தேர்த்திருவிழாவில், தேரோட்டம் நடைபெற உள்ளது. அம்மையப்பரை இறையருளை பெற்ற பக்தர்கள், தேர்த்திருவிழாவில் பங்கேற்று அருளுக்கு பாத்திரமாகலாம்.
அழகான தோரண வாயில்
கோவிலின் தோற்றத்தை மெருகூட்டும் வகையில், ராஜகோபுரத்தின் முன்னதாக, தோரண வாயில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரமாண்டமான நான்கு துாண்கள், ஏழு படிகளுடன், தோரண வாயில் மண்டபம், எழில்மிகு காட்சியளிக்கிறது. மண்டப படிக்கட்டின் இருபுறமும், கலைநயத்துடன் கூடிய யானை சிற்பம் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
தோரண வாயில் மண்டப கற்துாண்களில், விநாயகர், முருகரும், துவாரபாலகர்களும் வரவேற்கின்றனர். நாகலிங்கம், வேலுடன் மயில், அன்னம், யாழி, யானைகள், உயரத்தை தாங்கி நிற்கும் நந்திவாகனங்கள்; கரம் கூப்பி சேவித்தபடி காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் புடைப்பு சிற்பங்களுடன், கற்துாண்கள் கனகச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளன.
வானுயர்ந்த ராஜகோபுரம்
அழகிய சுதைகளுடன் காட்சியளிக்கும் ராஜகோபுரத்தை கடந்து செல்லும் போது, அதன் உயரத்தையும், அழகான மரக்கதவு, நேர்த்தியாக அடிக்கி கட்டப்பட்டுள்ள, வெள்ளை கற்களை பார்த்தாலே பிரமிப்பூட்டுகிறது. உள்ளே சென்றதும், பழமையான கொடிமரமும், கொடிமர விநாயகரும் காட்சியளிக்கின்றனர். கொடிமர விநாயகரிடம், விளக்கேற்றி வழிபட்டால், கற்பூரம் போல கடன் கரையும் என்பது, சிவாச்சாரியார்களின் வாக்கு.
சப்தரிஷிகள், சப்த மாதர்கள்
கோவிலுக்கு உள்ளே சென்று, கொடிமரத்தை வணங்கியதும், இடதுபுறமாக பார்த்தால், விசாலாட்சி அம்மனை நோக்கியபடி, சப்தரிஷிகளும், சப்தமாதர்களும் காட்சியளிக்கின்றனர். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கோலத்தில், மிகவும் பழமையான சிற்பங்களாக 14 பேரின் உருவங்களும் அமைந்துள்ள. சப்தமாதர்களும், சப்தகன்னியரும், கோவிலில் இருப்பார்கள். அகத்தியர், புலத்தியர், பரத்வாசர், பராசரர், கௌதமர், கவுசிகர், காஷ்யபர் ஆகிய ஏழு ரிஷிகள் இங்கு காட்சியளிக்கின்றனர். நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில், சப்தர சப்தரிஷிகள் மற்றும் சப்தமாதர்கள் அமைந்திருப்பது சிறப்புக்குரிய ஒன்றாகும்.