பதிவு செய்த நாள்
31
ஜூலை
2026
11:07
நம் பராம்பரியமும், கலாச்சாரமும் மாறாமல் தொடர, ஆலய வழிபாட்டு முறைகளும், ஆன்மிக பயணங்களும் உதவுகிறது. அவ்வகையில், திருப்பூர், அங்கேரிபாளையம், அவிநாசிகவுண்டம்பாளையத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ கருப்பராயர், அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாம், ஸ்ரீ மாகாளியம்மன் எழுந்தருளி மக்களை காத்தருள்கின்றனர்.
இந்த பெருமை மிக்க கோவிலுக்கு சிறப்பு மிக்க வரலாறும் உண்டு. கடந்த, 1965ம் ஆண்டு ஏ.வி.பழனிசாமி முயற்சியாலும், ஊர் பெரியோர்கள் ஒத்துழைப்பாலும் பராமரிக்கப்பட்ட வந்த இந்த கோவில், பழனிசாமி காலத்துக்கு பின் அவரது மகன் ஏவிபி அருள்ஜோதி தலைமையில் செயல்பட துவங்கியது. இவரது தலைமையில், 1997ல் புதிய கோவில் கமிட்டி ஏற்படுத்தப்பட்டு, சிறியதாக இருந்த கோவிலில் திருப்பணி செய்து, பெரிய அளவில் புதிய கட்டடத்தில் உருவாக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, அருள்ஜோதி அறங்காவலராக பொறுப்பேற்றார்.
பொருளாளராக பொறுப்பேற்ற திருமூர்த்தி இன்று வரை இந்த கோவில் கமிட்டி பணிகளை தொடர்ந்து கண்ணின் இமைபோல் பார்த்து வருகிறார். அருள்ஜோதி மறைவுக்கு பின் அவரது மகன் கார்த்திகேயன் அருள்ஜோதி தனது தாத்தா பழனிசாமி, தந்தை அருள்ஜோதி விட்டுச்சென்ற மாசற்ற மகத்துவத்தை காக்கும் வகையிலான பணிகளை தெய்வீக தன்மையுடன் தொடரும் பொருட்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பொறுப்பேற்று, கோவில் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கடந்த, 2005 ம் ஆண்டு கோவிலை விரிவுபடுத்தி சிறப்பாக கட்டி, கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
கும்பாபிஷேகம் கோலாகலம்
கடந்த 2017ம் ஆண்டில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக வழிபாட்டு நடைமுறைகளை பக்தர்களும், கோவில் கமிட்டியாரும் பின்பற்றி வருவது உண்மையிலேயே பாராட்டுக்கும் பெருமைக்குரிய செயலாகும். கோவில் கமிட்டியரின் இந்த சேவைகள் பொங்கல் பூச்சாட்டு, மாவிளக்கு பூஜைகளுடன் நின்று விடுவதில்லை.
ஆண்டுதோறும் ஆங்கிலப்புத்தாண்டு, சித்திரைக்கனி, ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாதத்தில் முதல் வரும் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள், தீபாவளி, பொங்கல், மார்கழி மாத நாட்கள், சங்கடஹரசதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை என பல்வேறு சிறப்பு தினங்கள், விசஷே, அபிஷேக, அலங்கார ஆராதனை பூஜைகளை முன்னின்று காலம் தவறாமல் நடத்தி அன்னதானமும் வழங்கும் சிறப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது மட்டுமின்றி தினமும் காலை 6:00 மணி முதல், 10:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல், 8:00 மணி வரையிலும் தினசரி அலங்கார வழிபாட்டு பூஜைகளும் உரிய நேரங்களில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பிரபஞ்சத்தை காத்து ரட்சிக்கும் அன்னையவளாம், அவிநாசிக் கவுண்டம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மனை வணங்கி, மகிழ்ச்சியுடன் வாழ பக்தர்களை அன்புடன், கருணாம்பிகா குரூப்ஸ் தலைவர் கருணாம்பிகா ராமசாமி அன்புடன் அழைக்கிறார்.