பதிவு செய்த நாள்
01
பிப்
2013
10:02
ராமேஸ்வரம்: பாரம்பரியமாக தமிழக, இலங்கை மீனவர்கள் பங்கேற்கும், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா, பிப். 24ம் தேதி நடைபெற உள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் கோயில் விழாவில், இந்திய-இலங்கை தமிழ் மீனவர்கள் சங்கமித்து, தொப்புள் கொடி உறவுகளை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். இந்தாண்டு, இந்த கோயிலில் பிப்.,24ம் தேதி விழா நடக்க உள்ளதாக, இலங்கை யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறை மாவட்ட பிஷப் தாமஸ் சவுந்திரநாயகம், ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜிக்கு, தகவல் அனுப்பியுள்ளார். கச்சத்தீவு விழாவில், தமிழக பக்தர்கள் பங்கேற்க அனுமதி கோரி, கலெக்டர் நந்தக்குமாரிடம் பாதிரியார் சகாயராஜ் மனு கொடுத்தார். இது குறித்து பாதிரியார் சகாயராஜ் கூறியதாவது: பிப்.,23ம் தேதி காலை ராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் கச்சதீவிற்கு செல்ல உள்ளோம். அன்று மத்திய, மாநில அரசு பாதுகாப்பு அதிகாரிகள், பல மணி நேரம் சோதனை நடத்துவதால், பக்தர்கள் வெயிலில் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும், கச்சத்தீவில் ராமேஸ்வரம் படகுகள் சேதமாகாமல் தடுக்கவும், படகில் இருந்து பக்தர்கள் இறங்க மாற்று படகுகளும், தீவில் கூடுதல் குடிநீர், கழிப்பறை வசதி செய்து தரும்படி, இலங்கை பிஷப்பிடம் கோரி உள்ளேன், என்றார்.