பதிவு செய்த நாள்
01
பிப்
2013
10:02
காந்தி நகர்:அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள், அங்குள்ள குளிரை தாக்கு பிடிக்க முடியாமல், அவதிப்படுவதை தவிர்க்கும் நோக்கில், "அமர்நாத் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக, தங்கள், உடல் நலம் குறித்த சான்றிழை தாக்கல் செய்ய வேண்டும் என, குஜராத் மாநில அரசு உத்தரவிட்டது.அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களில். அதிகமானோர் பலியாவது குறித்து, கடந்தாண்டு ஜூலை மாதம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "அமர்நாத் பக்தர்களுக்கு, போதுமான வசதிகள் கிடைக்கவில்லை. மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குஜராத் மாநில நிதி அமைச்சர், நிதின் படேல், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அடுத்து, இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், தங்கள் உடல் நலம், பயணத்திற்கு ஏற்ற வகையில் முழு தகுதியுடன் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், மருத்துவ சான்றிதழ் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. யாத்திரை துவங்குவதற்கு முன், அரசு மருத்துவமனைகளில், மருத்துவ சோதனைகளை மேற் கொள்ள வேண்டும். இதற்கான வசதிகள், அரசு மருத்துமனைகளில் உள்ளன. மருத்துவமனைகள் அளிக்கும் தடையில்லா சான்றிதழ் இருந்தால் மட்டுமே, பக்தர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும்.ஜம்மு காஷ்மீர் அரசின் கோரிக்கையை அடுத்து, முழு மருத்துவ குழுவையும், சிறப்பு டாக்டர்களையும், அமர்நாத் அனுப்ப உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.அமர்நாத் பனிலிங்கம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், 13,500 அடி உயரத்தில் உள்ளது. கடும் பனிப் பொழிவு இருப்பதால், கடந்தாண்டு, கடும் குளிரை தாக்குபிடிக்க முடியாமல், அமர்நாத் சென்ற பக்தர்கள், 90 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.