ஸ்ரீரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகர் சுவாமிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான காரணம் இதுதான். ஆண்டாள், கண்ணனை கணவனாக அடைய இவ்விரு பெருமாள்களிடமும் வேண்டிக்கொண்டாளாம். எனவே, அதற்கு நன்றி செய்யும்விதமாக உற்ஸவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ராபவுர்ணமியின்போது, கள்ளழகருக்கும், புரட்டாசி 5ம் திருநாளன்று திருப்பதிக்கும் செல்கிறது. அவள் கொடுத்தனுப்பும் மாலையுடன் ஆண்டாள் பட்டுப்புடவை, கிளியும் கொண்டு செல்லப்படுகிறது.
ஸ்ரீவில்லிப்புத்துார் பெருமை
அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது. இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகும். லட்சுமி தாயாரே ஆண்டாளாகவும், கருடாழ்வாரின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்ததும் இத்தலத்தில்தான். இவ்விருவருமே ஆழ்வார்களில் ஒருவராக இடம்பிடித்தவர்கள். இவ்வூரை, ‘கோதை பிறந்த ஊர்’, ‘கோவிந்தன் வாழும் ஊர்’ என்றும் சிறப்பித்து சொல்வர். ஆகவே, 108 திவ்யதேசங்களில் இல்லாத பெருமை இத்தலத்திற்கு கிடைத்துள்ளது.