ஸ்ரீவில்லிபுத்துார் வடபெருங்கோயிலுடையான் சன்னதி ராஜகோபுரத்தை கட்டியவர் பெரியாழ்வார். 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. பெரியாழ்வார் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 196 காசுகள் மதிப்பிருந்ததாம்.
இதன் அடிப்படையில் அவர், இந்த உயரத்தில் கோபுரம் கட்டியதாக சொல்கிறார்கள். இக்கோபுரத்தை பற்றி கம்பர், “திருக்கோபுரத்துக் கிணையம்பொன் மேருச்சிகரம்” என மேருமலை சிகரத்திற்கு ஒப்பாக குறிப்பிட்டு பாடியுள்ளார்.
பொதுவாக கோயில் கோபுரங்களில் சுவாமிகளின் சிற்பங்கள் இருக்கும். ஆனால், என்ன காரணத்தாலோ பெரியாழ்வார் இக்கோபுரத்தை கட்டியபோது சிற்பங்கள் எதுவும் அமைக்கவில்லை. சிலைகள் இல்லாமல், தமிழர்களின் கட்டடக்கலையை எடுத்துக்காட்டும் விதமாக இருந்ததும், இக்கோபுரம் தமிழக அரசின் சின்னமாக இடம்பிடிக்க ஒரு காரணமாக அமைந்தது.