பதிவு செய்த நாள்
27
அக்
2026
12:10
துமகூரின் திப்டூர் தாலுகா தாசரி கட்டா கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பக்தர்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்னைகள், சொத்து தகராறு, திருமண தடை, உடல்நலக்குறைவு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண, இங்கு வருகின்றனர்.
கோவிலில் உள்ள பெரிய தட்டில் அரிசி மாவு அல்லது கேழ்வரது மாவு போட்டு வைப்பர். அந்த தட்டின் முன்பு அமர்ந்து, பக்தர்கள் தங்கள் பிரச்னைகளை வாய்மொழியாகவோ அல்லது மனதிற்குள்ளோ அம்மனிடம் முறையிடுகின்றனர்.
அந்த தட்டின் முன்பு அம்மனின் விக்ரஹத்தை வைத்து அர்ச்சகர்கள், கிராம மக்கள் தாங்கி பிடிக்கின்றனர்.
பக்தர்கள் தங்கள் கோரிக்கையை முறையிட்ட பின், அம்மன் விக்ரஹத்தின் தலைப்பகுதி தானாகவே நகர்ந்து, அந்த மாவில் மிக துல்லியமான பதில்களை எழுத துவங்கும்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று எந்த மொழியில் கேட்டாலும், அதற்குரிய பதில் கன்னட எழுத்து வடிவில் கிடைக்கிறது.
இந்த அதிசயம் எப்படி நடக்கிறது என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.
இந்த கோவில் உருவான வரலாறும் சிறப்பு வாய்ந்தது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு, நந்தவாரா என்ற நாட்டின் அரசன் தீவிர கடவுள் பக்தராக இருந்தார். தினமும் அதிகாலை 4:00 மணிக்கு காசிக்கு சென்று கங்கையில் நீராடி, சூரிய உதயத்திற்குள் தனது நாட்டிற்கு திரும்பி வந்து சவுடேஸ்வரி அம்மனை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஒரு முறை நந்தவாராவின் கனவில் தோன்றிய சவுடேஸ்வரி அம்மன், நான் எப்போதும் உனக்கு துணையாக வருவேன். ஆனால், எனக்கு பிடிக்கும் இடத்தை அடைந்தால், அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவேன் என்று கூறினாராம்.
கனவில் தோன்றி கூறியபடி நிஜத்திலும் சவுடேஸ்வரி அம்மன் நடந்து கொண்டார்.
ஒரு முறை பசுமையான காடுகள், அழகான மலை பகுதியை அம்மன் கடந்து சென்ற போது, அங்கேயே நிலைபெற முடிவு செய்தார். இதனால் நந்தவாரா அந்த இடத்திலேயே சவுடேஸ்வரி அம்மனுக்கு கோவில் எழுப்பினார். முதலில் யசவந்தராயா பட்டணா என்று அழைக்கப்பட்ட இடம், காலப்போக்கில் தாசரிகட்டா என்று மாறியது.
தற்போது கோவிலில் தசரா, நவராத்திரி திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காலை 9:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். அம்மனிடம் அருள்வாக்கு கேட்க விரும்புவோர் சிறப்பு கட்டணம் செலுத்தி டோக்கன் பெற வேண்டும்.
பெங்களூரில் இருந்து தாசரிகட்டா கிராமம் 150 கி.மீ., துாரத்தில் உள்ளது.
துமகூரில் இருந்து 85 கி.மீ., மற்றும் திப்டூர் நகரில் இருந்து 10 கி.மீ.,
மெஜஸ்டிக்கில் இருந்து திப்டூர் செல்லும் அரசு பஸ்சில் சென்று, திப்டூர் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் கோவிலுக்கு செல்லலாம்.
ரயிலில் சென்றால் திப்டூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 5 கி.மீ., துாரத்தில் உள்ள கோவிலை அடையலாம்.