பதிவு செய்த நாள்
28
அக்
2026
11:10
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையான நேற்று, கிருத்திகை விழா விமரிசையாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையான நேற்று, ஐப்பசி மாத கிருத்திகை விழா, விமரிசையாக நடந்தது.
இதையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சரவண பொய்கையில் நீராடி மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், எடைக்கு எடை துலாபாரம் எடுத்தல், என நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு, பரணி உற்சவத்தில் கந்த பெருமான் சிறப்பு அலங்காரத்தில், மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் பழமை வாய்ந்த வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகையையொட்டி நேற்று காலை மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள முருகன் கோவில்களில் கிருத்திகை தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.