பதிவு செய்த நாள்
12
நவ
2026
11:11
மூலம்: போராடி வெற்றி பெறுவீர்
திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, இதுவரை உங்கள் ராசிக்கு முயற்சி மற்றும் சகாய ஸ்தானமான 3 ம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் வாழ்வை வளமாக்கி, முயற்சிகளை வெற்றியாக்கி வந்த ராகு நவ. 13 முதல், உங்கள் ராசிக்கு 2 ம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 9 ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து, பெரியோரின் நட்பையும், செல்வாக்கையும், தெய்வ அருளையும் வழங்கி வந்த கேது அஷ்டம ஸ்தானமான 8 ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.
தன குடும்ப வாக்கு ஸ்தானமான 2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, நன்மையும் தீமையும் கலந்த பலன்களையே வழங்குவார். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். அதே நேரத்தில் மனதிற்குள் இனம் புரியாத குழப்பமும் பயமும் ஏற்படும். செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத வரவும் வரும். அதே நேரத்தில் வரவிற்கு மீறிய செலவும் ஏற்படும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைத்தாலும் அத்துடன் இடமாற்றமும் உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்களை அனுசரித்துச் சென்றாலும் உங்களுக்குள் வருத்தமும் கோபமும் இருக்கும்.
அஷ்டம ஸ்தானமான 8 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். மறைமுகத்தொல்லைகள் அதிகரிக்கும். எந்த வேலையை எடுத்தாலும் அதில் ஏதாகிலும் ஒரு பிரச்னை உண்டாகும். வருமானத்திற்காகவும், ஆசையினாலும் தவறான வழியிலும் சிலர் செல்ல நேரும். சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வெளியூர் செல்ல வேண்டிய நிலை உருவாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் பிரச்னைகளும் வழக்குகளும் ஏற்படும். சிலருக்கு இடைக்கால பணி நீக்கம், விசாரணை என்ற நிலையும் உருவாகும்.
2028 ஏப். 24 வரை அர்த்தாஷ்டம சனிக்காலம் என்றாலும், கடக குருவின் பார்வைகளும், சிம்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் பாக்கிய குருவும் உங்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பர். மாசி, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய 4 மாதங்களும் ஆத்ம காரகன் சூரியன் உங்கள் நிலையை உயர்த்துவார், முயற்சிகளை வெற்றியாக்குவார் என்றாலும், வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைப்பது நன்மையை உண்டாக்கும். எதிர்பாலினர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். வாகனப்பயணத்தில் நிதானம் நன்மைதரும்.
ராகு கேது சஞ்சார நிலை எதிர்மறையாக இருந்தாலும், குருப் பார்வைகளும், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். இதற்கு முன்பிருந்த சங்கடங்களை விலக்கும். நஷ்டத்தின் காரணமாக மூடப்பட்ட தொழில்களை மீண்டும் திறந்திடக்கூடிய நிலை உண்டாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். நிதி நிறுவனம். ஷேர் மார்க்கெட். எக்ஸ்போர்ட். ஜுவல்லரி. ஆன்லைன் வர்த்தகம். கம்ப்யூட்டர். ஐ.டி துறை. கல்வி நிறுவனம். நோட்டுப் புத்தகம் தயாரிப்பு. பப்ளிகேஷன். கன்சல்டன்சி தொழில்கள் வளர்ச்சியடையும்.
உங்கள் முயற்சிக்கும் திறமைக்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும் என்றாலும், சூழ்நிலையை அறிந்து செயல்படுவது அவசியம். உங்களுடன் வேலைப் பார்ப்பவர்களே உங்களுக்கு எதிராக மாறுவர். அவர்கள் செய்யும் சதியின் காரணமாக வேலையையும் இழக்க நேரிடும். அரசு பணியாளர்கள் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலர் அவமானத்திற்கும் ஆளாக நேரும். மெமோ எதிர்பாராத இடமாற்றம் என்று ஏற்படுவதுடன் சிலருக்கு எதிர்பாலினரால் வீண் பழியும் உண்டாகும்.
குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உங்கள் ஆரோக்கியத்திலும், கணவரின் உடல்நிலையிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் செல்வாக்கு, வேலையில் மதிப்பு இருந்தாலும் இக்காலத்தில் சுய கட்டுப்பாடு என்பது அவசியம். உங்களுக்கு நெருக்கமானவராக இருந்தாலும் அவர்களிடமும் ஓரடி விலகி இருப்பது நன்மையை உண்டாக்கும். குடும்ப ரகசியங்களை எவரிடமும் தெரிவிக்காமல் இருப்பதால் உங்கள் கவுரவம் பாதுகாக்கப்படும். உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருசிலர் வதந்தியை உருவாக்குவர். அதனால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். பணிபுரியும் இடத்திலும் நெருக்கடி அதிகரிக்கும் என்பதால், எந்த ஒன்றாக இருந்தாலும் குடும்பத்தினர் ஆலோசனையுடன் செயல்படுவது நன்மையளிக்கும்.
படிப்பில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். எதிர்வரும் பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவாலும், அர்த்தாஷ்டம சனியினாலும் உடல் நிலையில் ஏதாகிலும் ஒரு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அடிக்கடி மருத்துவமனைக்கும் செல்ல நேரிடும். என்ன நோய்? ஏன் பாதிப்பு? என்பதே சிலருக்கு தெரியாமல் போகும். சிலர் விபத்தையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதால் இக்காலத்தில் உடல் நிலையில் கவனமாகவும் பயணத்தில் எச்சரிக்கையாகவும் இருப்பது நன்மையாகும்.
குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கும் இக்காலத்தில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வது நன்மையளிக்கும். இல்லையெனில் பிரிவு, பிரச்னை என்பதும் சிலருக்கு ஏற்படும். இக்காலத்தில் குடும்பத்திற்குள் பிறருடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வெளியாட்களுடனான பழக்கத்தை ஒரு எல்லைக்குள் நிறுத்துவது நன்மையளிக்கும். குடும்பம் குழந்தைகள் என்ற பிடிப்புடன் வாழ்வதும், குடும்ப நலனில் அக்கறை எடுப்பதும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
பரிகாரம்: வல்லப கணபதியை வழிபட வாழ்க்கை வளமாகும்.
பூராடம்: உங்கள் நட்சத்திர நாதனான சுக்கிரனுக்கு ராகுவும் கேதுவும் நண்பர்கள் என்றாலும், கோச்சார ரீதியாக அவர்கள் சஞ்சரிக்கும் போது சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை வழங்கக் கூடியவர்கள் ஆவர். சுக்கிரனுக்கு நட்பான ராகு சனி பகவானுக்கும் நட்பானவர் என்பதுடன், அவர் நவ. 13 முதல் சனி பகவானின் ஆட்சி வீடும் உங்கள் ராசிக்கு 2 ம் வீடுமான மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். ராகு கேதுவிற்கு பகை கிரகமும், உங்கள் ராசிக்கு எட்டாம் இடமுமான சந்திரனுடைய கடக ராசிக்குள் கேது சஞ்சரிக்கப்போகிறார்.
தன குடும்ப வாக்கு ஸ்தானமான 2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, உங்கள் ஆர்வத்தை அதிகரிப்பார். மனதில் மிகப்பெரிய திட்டங்களைத் தீட்ட வைப்பார் என்றாலும், அவற்றை நடைமுறைப் படுத்த முடியாத அளவிற்கு தடைகளையும் ஏற்படுத்துவார். குறுக்கு வழியில் சென்று சிலர் லாபம் தேட முயற்சிப்பீர்கள் அதில் ஓரளவிற்கு நன்மை உண்டாகும். என்னதான் வரவு வந்தாலும் மறுபக்கம் செலவும் காத்துக்கொண்டிருக்கும். அதனால் மனதில் நிம்மதியற்ற நிலை இருக்கும். வசிக்கும் இடத்திலும் அக்கம் பக்கத்தினரால் சங்கடங்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் தொல்லை, பொருள் இழப்பு, வீண் அலைச்சல் என்று உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் நிம்மதியில்லா நிலை இருக்கும். மேல் அதிகாரியின் ஆதரவு எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காமல் போகும். சிலர் பணத்தட்டுப்பாட்டின் காரணமாக வீட்டில் உள்ள பொருட்களையும் விற்கச்செய்வீர்கள். நினைத்த காரியங்கள் எதுவும் கூடி வராமல் மனதளவில் சங்கடங்களையும் அனுபவிக்க வேண்டிவரும். இந்த நேரத்தில் குடும்பத்தில் சுப காரியம் கூடிவருவதுடன் ஒரு சில நன்மைகளையும் காண்பீர்கள். தெய்வ பக்தியும் அதிகரிக்கும்.
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8 ம் இடம் என்பது பாக்கிய ஸ்தானத்திற்கு விரய ஸ்தானம் என்பதால், இங்கு சஞ்சரிக்கும் கேதுவால் வருமானத்திலும் தொழிலிலும் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். நெருங்கிய உறவினர்களுக்கும் சங்கடங்கள் உண்டாகலாம். எல்லாவற்றையும் எளிதாக சாதித்து வந்த உங்களுக்கு இக்காலத்தில் நீங்கள் நினைத்தபடி எந்த ஒன்றையும் சாதிக்க முடியாமல் போகும். சிலர் சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்று வாழவேண்டிய, தொழில் செய்ய வேண்டிய நிலையும் உண்டாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடிக்குமேல் நெருக்கடிகள் உண்டாகும். ஒரு சிலருக்கு பணி நீக்கம் என்ற நிலையும், விரும்பாத இடமாற்றமும் ஏற்படும். வருமானத்திலும் தடைகள் உண்டாகும். எனவே இக்காலத்தில் செய்துவரும் தொழிலிலும் பார்த்துவரும் வேலையிலும் முழு கவனத்தை செலுத்துவதுடன், ஒவ்வொரு வேலையையும் யோசித்து செய்வதால் எதிர்வரும் சங்கடங்கள் விலகிப் போகும். எதிர்பாராத விபத்துகளையும் சிலர் சந்திக்க வேண்டியதாக இருக்கும் அதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்ப்பாலினரால் அவமானப்பட வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும் என்பதால் ஒழுக்கநெறியுடன் வாழ்வது அவசியம்.
ராகு, கேது, சனி சஞ்சார நிலை எதிர்மறையாக இருந்தாலும், சுய ஜாதகம் பலமாக இருப்பவர்களுக்கு நன்மைகளே உண்டாகும். உங்கள் ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களிலும், 3,6,11 ம் இடங்களில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்களிலும், குருப்பார்வைகளாலும் எடுத்த வேலைகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். வருமானம் உயரும். வேலையில் இருந்த சங்கடங்கள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும்.
யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பது, உங்கள் சகாய ஸ்தானத்திற்கு விரய ஸ்தானம் என்பதால் இக்காலத்தில் எடுக்கும் முயற்சியில் தடைகள் ஏற்படும். எந்த ஒன்றிலும் அதிகபட்ச அக்கறையும் உழைப்பும் தேவைப்படும். ஆடை ஆபரணம். ரெடிமேட். அழகு சாதனம். கவரிங். பேன்சி ஸ்டோர். ஜுவல்லரி. வாகன விற்பனை. உதிரிபாக விற்பனை. ஸ்டேஷனரி. ஆன்லைன் வர்த்தகம். ஷேர் மார்க்கெட். கம்ப்யூட்டர். சினிமா. தொலைக்காட்சி. பதிப்பகம். கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.
மறைமுக எதிர்ப்புகளும் மேல் அதிகாரியுடன் இணக்கமற்ற நிலையும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் வேலைப்பார்க்கும் இடத்தில் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்ப்பவர்கள் நிறுவனத்தின் நோக்கத்திற்கேற்ப செயல்படுவதால் நெருக்கடி ஏற்படாமல் போகும். அரசு பணியில் இருப்பவர்கள் தவறுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் சட்ட சிக்கல்களில் சிக்காமல் தப்பிக்கலாம்.
வேலைப்பார்க்கும் இடத்தில் பணியில் கவனமாக இருப்பதும், நட்புகளிடம் ஓரடி விலகி நடப்பதும், குடும்பத்தினர் ஆலோசனைக்கு மதிப்பளிப்பதும் நன்மையை உண்டாக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு வேலையிலும் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம். உடல் நிலையில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். சுயதொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது அவசியம்.
படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வதும், ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதும் நன்மையளிக்கும். தவறான நட்புகளை விட்டு இக்காலத்தில் விலகுவது அவசியம்.
அஷ்டம கேது, அர்த்தாஷ்டம சனியின் காலம் என்பதால் உடல் நிலையில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். பரம்பரை நோய், தொற்று நோய் என்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் நோய் வந்தவுடன் மருத்துவரை சந்திப்பது அவசியம். வாகனப் பயணத்தில் நிதானம் காப்பது அவசியம்.
தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செயல்பட வேண்டிய நேரமிது. இக்காலத்தில் தன்குடும்பம் தன்பிள்ளை என்ற மனநிலையுடன் வாழ்க்கையை நகர்த்திச் செல்வது அவசியம். புதிய நபர்களை குடும்பத்திற்குள் அனுமதிப்பதால் தேவையற்ற சிக்கல்கள் உண்டாகும். குடும்ப ரகசியங்களையும் வெளியார் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். சொந்த வீடு வாகனம் என்ற கனவு சிலருக்கு நனவாகும். குடும்பத்தில் சுப விசேஷமும் நடந்தேறும். பெரியோரின் ஆலோசனை இக்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பரிகாரம்: அஷ்டபுஜ துர்க்கையை வழிபட எதிர்வரும் சங்கடங்கள் உங்களை விட்டு விலகும்.
உத்திராடம்: திறமை வெளிப்படும்
உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு, ராகு கேது இருவரும் பகைவர்கள் என்றாலும், அவர்கள் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும்போது சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலன்களை வழங்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ராகு தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்கிறார். கேது, உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்.
இந்த சஞ்சார நிலையின் காரணமாக, 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, குடும்பத்தில் சண்டை சச்சரவு என்று போராட்ட நிலை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பணவரவில் தடையுண்டாகும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். 2,3,4 ம் பாதத்தினருக்கு எல்லாவற்றிலும் ஆசை அதிகரிக்கும். குறுக்கு வழியில் செல்ல மனம் தூண்டும். தவறான நபர்களின் சகவாசமும் அவர்களால் சங்கடங்களையும் சந்திக்க வேண்டிவரும். உடல் நிலையிலும் மனநிலையிலும் மாற்றம் ஏற்படும். எந்த இடத்திலும் தனித்து நின்று எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டிவரும். தகுதிக் குறைவானவர்களால் வீண்பழியும் சிலருக்கு ஏற்படும். உறவினருடன் கருத்து வேறுபாடும் பகையும் உண்டாகும். சிலருக்கு இடமாற்றம் என்று ஏற்படும்.
கேது, உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். சிலர் விபத்தையும சந்திக்க நேரும். வியாபாரம் தொழிலில் கடுமையான போராட்டம் இருக்கும். எதிர்பார்ப்பிலும் தடையுண்டாகும் வருமானம் குறையும் மனதில் சங்கடம் அதிகரிக்கும்.
2,3,4 ம் பாதத்தினருக்கு கேது சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தவறான, தகுதிக்குறைவானவர் நட்பு ஏற்படும். சுய கௌரவத்திற்கும் அந்தஸ்திற்கும் பங்கம் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சண்டையும் பிரிவும் ஏற்படும். உறவினருடனும் பகை உண்டாகும். அதன் காரணமாக வசிக்கும் ஊரைவிட்டு வெளியூர் செல்லும் நிலையும் சிலருக்கு உண்டாகும்.
உத்திராடம் நான்கு பாதங்களில் பிறந்தவர்களுக்கும் ராகு கேது சஞ்சார நிலை எதிர்மறையாக இருந்தாலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஆதரவு கரம் நீட்டுவார். சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். இக்காலத்தில் குருப் பார்வைகளும், 3,6,11 ம் ராசிகளில் சஞ்சரிக்கும் செவ்வாயும், 3,6,10,11 ம் ராசிகளில் சஞ்சரிக்கும் சூரியனும் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பர். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். வருவாயை அதிகரிப்பர். நிம்மதியான நிலையை வழங்குவர்.
தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சிலர் ஈடுபடுவீர்கள். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். எலக்ட்ரானிக்ஸ். பாக்டரி. ஆட்டோமொபைல்ஸ். ஸ்டேஷனரி. பதிப்பகம். பத்திரிகை. சினிமா. டிவி. கம்ப்யூட்டர் தொழில்கள். வாகன உற்பத்தி, விற்பனை. பில்டர்ஸ். எக்ஸ்போர்ட். விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும்.
ராகு கேது சஞ்சாரம் எதிர்மறையாக இருந்தாலும், சனி, குரு, சூரியன், செவ்வாய் ஆதரவாக இருப்பர். வேலையில் அக்கறை கூடும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதி இருக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு தங்கள் தகுதிக்கேற்ற வேலையில் அமர்வர். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
படிப்பு, திருமணம், மறுமணம் என்ற கனவு நனவாகும். வேலைத் தேடுபவர்களுக்கு கவுரவமான வேலைக் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். பொன் பொருள் சேரும். மனதில் இருந்த இறுக்கம் காணாமல் போகும் என்றாலும், குடும்பத்தினரையும் வாழ்க்கைத் துணையையும் அனுசரித்துச்செல்வது நன்மையளிக்கும். புதியவர்களுடன் ஓரடி விலகி இருப்பதால் கௌரவம் பாதுகாக்கப்படும்.
படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனை இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுக்கும்.
உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. உஷ்ண நோய்கள், விஷ ஜந்துக்களால் பாதிப்பு, பரம்பரைநோய், தொற்றுநோய் என்று ஏதாகிலும் ஒன்று அவ்வப்போது சங்கடப்படுத்திக் கொண்டிருக்கும். சிலர் விபத்தையும் சந்திக்க நேரம் என்பதால் விழிப்புடன் இருப்பது அவசியம். உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நன்மையளிக்கும்.
திறமையாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டும், விட்டுக்கொடுத்தும் செயல்படுவது அவசியம். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.