சபரிமலை ஆன்லைன் முன்பதிவு: ரத்தாகும் சிலாட்டு களை மீண்டும் முன் பதிவு செய்ய வசதி தேவசம்போர்டு தலைவர் தகவல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2026 05:11
சபரிமலை: சபரிமலை ஆன்லைன் முன்பதிவில் ரத்தாகும் சிலாட்டுகளை மீண்டும் முன் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் கூறினார்
மேலும் கூறியதாவது: சபரிமலை தரிசனத்திற்கான விருச்சுவல் கியூ முன்பதிவு செய்த பின்னர் அதை ரத்து செய்யும் பட்சத்தில் அந்த சிலாட்டுகளை வேறு தேவைப்படும் பக்தர்களுக்கு வழங்கும் வகையில் இணையதளத்தில் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் முன்பதிவு செய்துவிட்டு அதை ரத்து செய்யும் பட்சத்தில் 8 மணி நேரம் கழிந்த பின்னர் அந்த முன் பதிவு இணையதளத்தில் வரும். தேவைப்படும் பக்தர்கள் அதை முன் பதிவு செய்து கொள்ளலாம். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது. சபரிமலையில் மண்டல காலம் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் தேவசம் போர்டுக்கு நல்ல திருப்தி உள்ளது. ஆன்லைன் முன்பதிவு அல்லது ஸ்பாட் புக்கிங் வழியாக பக்தர்கள் வருவதன் மூலம் சரியான திட்டமிடல் மூலம் கூட்டத்தை ஒழுங்கு படுத்த முடிந்தது. ஒரு கட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பண பரிமாற்றம் முழுமையாக டிஜிட்டல் மையமாக்க பட்டுள்ளதால் வருமான இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இது மொத்த வருமானத்தை கணக்கிடும்போது தெரியவரும். சன்னிதானம் மற்றும் சுற்றுப்புறங்களில் நல்ல சுகாதாரமான, தூய்மையான நிலை காணப்படுகிறது.
நிலக்கல்லில் வாகனங்களின் பார்க்கிங் முறைப்படுத்தப்பட்டுள்ளது. 12 ஆயிரம் வாகனங்கள் வரை ஒரே நேரத்தில் பார்க்கிங் செய்ய முடியும். பக்தர்கள் வாகனங்கள் பார்க் சிங் செய்துள்ள இடத்துக்கு செல்ல நிலக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து சர்குலர் சர்வீஸ் இயக்கப்படுகிறது. ஐயப்பனை காண வரும் ஒரு பக்தரும் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். ஏதாவது ஒரு முறையில் முன்பதிவு செய்து வர வேண்டும் என்பது விதி. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை ஏற்கனவே 5 ஆயிரம் கூட்டப்பட்டிருந்தது. தேவைப்பட்டால் மேலும் 5 ஆயிரம் அதிகரிக்கப்படும். பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக கூடி வருகிறது 23ஆம் தேதி 75 ஆயிரம் பேர் வந்துள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கை கூடினாலும் சபரிமலையில் கூட்ட நெரிசலுக்கான எந்த அனுபவமும் இல்லை என்பதுதான் இந்த மண்டல காலத்தில் சிறப்பு. கேரள அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படுகிறது. பம்பையில் பக்தர்கள் துணிகளை வீசுவது விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் குறைக்கப்பட்டுள்ளது. சீசன் தொடக்க காலத்தில் பக்தர்களின் வருகையை குறைக்கும் வகையில் ஏதாவது சதி நடந்துள்ளது என்பதை பற்றி சைபர் புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. அப்பாச்சி மேட்டில் இதய நோய் சிகிச்சை மையத்துடன் சேர்ந்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் பக்தர்கள் ஓய்வு மையம் ஒரு வாரத்தில் திறக்கப்படும். இதற்கு முந்தைய சீசன்களில் போட்டோ எடுப்பதற்காக மட்டும்தான் பல விஷயங்கள் நடத்தப்பட்ட வரலாறு உண்டு. ஆனால் தற்போது அப்படி இல்லை. அப்பம் அரவணை தேவைக்கேற்ப கையிருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.